சினிமா

தேசிய சின்னம் பயன்படுத்திய விவகாரம்: அமீர்கானுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2016-07-23 08:26 IST   |   Update On 2016-07-23 08:26:00 IST
சத்தியமேவ ஜெயதே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தேசிய சின்னம் பயன்படுத்திய விவகாரத்தில் அமீர்கானுக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் இந்திய தேசிய சின்னத்தை பயன்படுத்தி வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய சின்னத்தை தவறாக பயன்படுத்தியதற்காக நடிகர் அமீர்கான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த நவம்பர் மாதம் மனுவை தள்ளுபடி செய்தது.

அந்த தொண்டு நிறுவனம் சார்பில் இந்த வழக்கை தொடர்ந்திருந்த சண்டிகரை சேர்ந்த ஹர்மன் எஸ்.சித்து, ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி அவரது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் தேசிய சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக மனுதாரருக்கு ஏதேனும் தனிப்பட்ட கவலை இருந்தால், போலீசாரை அணுகுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Similar News