சினிமா
கடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும் - ரஜினிகாந்த் பேச்சு
கடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும். மற்றபடி பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார். #Rajinikanth
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி,
மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான்.
மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ராகவேந்திரா மண்டபம், சைவம் என்பதால் வேறு இடத்தில் அசைவ விருந்து படைத்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன்.
உங்களது உற்சாகத்தையும், உணர்ச்சியையும் உங்களை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. நானும் உங்களது வயதை தாண்டி வந்தவன் தான். நான் சிறுவயதில் பெங்களூருவில் இருந்த போது நடிகர் ராஜ்குமாரின் பெரிய ரசிகனாக இருந்தேன். கர்நாடகாவை பொருத்தவரை சிவாஜி, எம்.ஜி.ஆர். சேர்ந்த கலவை தான் ராஜ்குமார்.
ரசிகர்களை தன் காலில் விழ வேண்டாம் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும்.
அடுத்ததாக பெரியவர்களின் காலில் விழ வேண்டும். அது எதற்காகவென்றால், வாழ்க்கை என்கிற பாதை கஷ்டங்கள், துன்பங்கள், சோகங்கள், சோதனைகள் நிறைந்தது. அந்த பாதையை கடந்து வந்தவர்கள் பெரியவர்கள். நாமும் அதில் நடந்து வரப் போகிறோம். எனவே அவர்கள் காலில் விழ வேண்டும். மற்றபடி பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை என்றார். #Rajinikanth