மகளிர் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
- வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களும், ஷபாலி வர்மா 28 ரன்களும் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கேப்டன் கவுர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரிச்சா கோஷ் உடன், தேவிகா இணைய, இந்தியா 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.
11 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்ததால், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.