11-3-2025 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழா
- புற்றுதான் அம்மனாக இருக்கிறது.
- சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் என்றால், ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை அய்யனை தரிசிக்க வரலாம் என்ற கட்டுப்பாடு உண்டு.
சபரிமலை ஐயப்பனை மாலை அணிந்து விரதம் இருந்து தரிசிக்கச் செல்பவர்கள், இருமுடி கட்டி மலை ஏறிச் சென்று ஐயப்பனை வணங்கி வருவார்கள்.
அதே போல் பெண்கள் மட்டுமே இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் ஆலயங்களில் ஒன்றுதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவின்போது, பெண்கள் -அதுவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்து, தலையில் இருமுடி கட்டி வந்து, பொங்கல் வைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், கேரளாவில் உள்ள ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதுபோல, அங்குள்ள பெண்கள் பலரும் தமிழகத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்க, மாசி மாதம் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது வருகை தருவார்கள்.
இவ்வாலயத்தில் புற்று வடிவத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் அருள்பாலிக்கிறாள். நெடு நெடுவென வளர்ந்து நிற்கும் புற்றுதான் அம்மனாக இருக்கிறது. வெறும் புற்றை பகவதி அம்மனாக எல்லோராலும் மானசீகமாக முகத்திற்கு நேராக கொண்டு வந்து வணங்குதல் இயலாது என்பதால், அந்த புற்றின் மேல் பகுதியில் சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.
அந்த முகத்துக்கு கீழே உள்ள பகுதி சிவப்பு ஆடையால் மறைக்கப்பட்டு அதற்கு முன்னதாக ராணி சேதுலட்சுமிபாய் கொடுத்த வெள்ளி அங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் பிரமாண்டமாய் அம்மன் உருவம் தெரியும். அதற்கும் சற்று கீழே உற்சவ தேவி விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.
தலவரலாறு
முற்காலத்தில் இது ஆடு- மாடுகள் மேயும் மந்தையாக இருந்தது. காட்டுப்பகுதியாக இருந்ததால் 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி 'மண்டைக்காடு' என்றானதாக சொல்கிறார்கள்.
மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலத்தில் ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் ராஜராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் ஸ்ரீசக்கரத்தை கையில் வைத்திருப்பார். தினமும் இந்த இடத்திற்கு வந்து ஸ்ரீசக்கரத்தை கீழே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்.
மாலை வரை தியானத்தில் இருக்கும் அவர், எழுவதற்குள் அவர் மேல் புற்று பரவிவிடும். அப்பகுதியில் ஆடு- மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாலையானதும் புற்றை கலைத்து அவரை எழுப்பி விடுவார்கள். அவரும் ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார். இது வாடிக்கை.
ஆனால் ஒருநாள் சீடரால் தரையில் வைத்த ஸ்ரீசக்கரத்தை எடுக்க முடியவில்லை. இவர் தியானத்தில் ஆழ்ந்து என்னவென்று ஆராய 'நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்' என்று அவருக்கு அம்மனிடம் இருந்து உத்தரவு வந்தது.
அதனால் அந்த சீடரும் இங்கேயே இருந்துவிட முடிவு செய்து தியானத்தில் ஈடுபட்டார். வழக்கமாக அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் சிறுவர்களை 'இனி எழுப்ப வேண்டாம்' என்று சொல்லிவிட்டு அப்படியே ஜீவ சமாதியாகி விட்டார்.
அவர் மேல் புற்றும் வளர்ந்தது. அதுதான் இன்றுவரை வளர்ந்து வளர்ந்து மேருவாக ஆகி இருக்கிறது. ஸ்ரீசக்கரத்தில் இருந்த அம்மன்தான் இங்கே இப்போது பகவதி அம்மனாக காட்சி தருகிறார்.
காலங்கள் சென்றபின்னர் அப்பகுதியில் ஆடு -மேய்க்கும் சிறுவர்கள், பனை மரத்தின் காயை வைத்து பந்தாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அடித்த பனங்காய் புற்றின்மேல் பட்டு புற்று சிறிது சேதமடைந்தது.
சிறுவர்கள் வந்து பார்த்தபோது புற்றின் சேதமான பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டவாறே இருந்தது. சிறுவர்கள் ஊருக்குள் ஓடிப்போய் பெரியவர்களை அழைத்து வந்தார்கள். அப்போது அருள் வந்து ஆடிய ஒருவர், "இந்த புற்றுதான் தேவி பகவதி. அவள் இங்கே வெகு காலமாக இருக்கிறாள். புற்றில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த அங்கே சந்தனத்தை அரைத்து பூசவேண்டும்" என்று அருள் வாக்கு கூறினார்.
புற்று இருந்த இடத்தின் உரிமையாளரும் அவ்வாறே செய்ய ரத்தம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் ஒரு ஓலைக்குடிசை போட்டு புற்றை அம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள். அம்மனை வந்து வழிபட்டவர்கள் நினைத்ததெல்லாம் நடக்க ஆரம்பிக்க பக்தர்கள் கூட்டம் பெருகியது.
கேரள வழக்கப்படி பெண் தெய்வம் என்றால் அது பகவதிதான். அப்படித்தான் மண்டைக்காடு பகவதியாக மக்கள் வழிபடத் தொடங் கினர்.
இவ்வாலயத்தின் கொடை விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது. கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் 'வலிய படுக்கை' என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கூடை கூடையாய் பூக்கள், பழங்கள், பலகாரம், வடை, அப்பம், திரளி ஆகியவற்றை, பக்தர்கள் தங்களின் வாயை மூடியபடி ஊர்வலமாக பாத்திரங்களில் எடுத்து வந்து அம்மன் சன்னிதி முன்பாக படைத்து வழிபடுவார்கள்.
மேலும் இந்த படைப்புக்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்படுவது என்பது கூடுதல் விசேஷம். வலிய படுக்கை என்ற ஒடுக்கு பூஜையின்போது கோவில் நிசப்தமாக இருக்கும்.
மாசி மாத திருவிழாவின்போது மட்டுமின்றி, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பவுர்ணமி நாட்களிலும் இவ்வாலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர் கோவிலில் இருந்து சுமார், 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மண்டைக்காடு திருத்தலம்.