ஆன்மிகம்

திருவட்டாரில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்: ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு புதிய கொடிமரம்

Published On 2016-10-18 08:58 GMT   |   Update On 2016-10-18 08:58 GMT
தென்னாட்டின் வைகுண்டம் என்று போற்றப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகின்றன.
தென்னாட்டின் வைகுண்டம் என்று போற்றப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலில் தற்போதுள்ள செம்பு தகடு பதித்த கொடிமரம் சேதமான நிலையில் உள்ளதால் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதனையொட்டி கேரள மாநிலம் பத்தனம் திட்டா வனப்பகுதியில் இருந்து 70 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து கோவில் மேலாளர் சுதர்சன குமார் கூறியதாவது:-

திருவட்டார் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக சுமார் 70 அடி உயரம் கொண்ட தேக்கு மரம் கேரள மாநில வனப்பகுதியான பத்தனம் திட்டார் அருகே கோணி குமரன் பேரூர் வனச்சகரம் நெல்லைடப்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை வெட்ட கேரள வனத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த மரம் தாந்திரீக விதிப்படி வருகிற 20-ந் தேதி நண்பகலில் வெட்டப்படுகிறது. முன்னதாக 19-ந் தேதி மாலையில் மரத்தை வெட்டுவதற்காக மரங்களிடமும், பறவை களிடமும் அனுமதி கேட்கும் பூஜை நடத்தப்படுகிறது. கொடிமரம் 23-ந் தேதி கோவில் வளாகம் வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில்கள் இணை ஆணையர் பாரதி, கண்காணிப்பாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகிகள், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News