ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திருவேடுபறி
- திருமங்கை ஆழ்வாா் கை கூப்பிய நிலையில் தோளுக்கினியானில் எழுந்தருளினாா்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவதிருப்பதிகளில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாா்கழி திரு அத்யன உற்சவம் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலையில் உற்சவா் பொலிந்து நின்றபிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வாா் ஆகியோருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பிரபந்த பாராயணம் நடைபெறுகின்றது.
இராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான நேற்று மாலையில் திருவேடுபறி வைபவம் கோவில் வடக்கு மாட வீதியில் நடந்தது.
சுவாமி பொலிந்து நின்றபிரான் ஒரு கையில் தங்க கவசம், ஒரு கையில் சாட்டை, தலையில் கொண்டை, மாா்பில் காசு மாலை, செண்பக மாலை, கல் பதித்த ஆபரணம், மலா் மாலைகள் போன்றவை அணிந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கை ஆழ்வாா் கை கூப்பிய நிலையில் தோளுக்கினியானில் எழுந்தருளினாா்.
இந்த நிகழ்ச்சி முடிந்து கோவிலில் எழுந்தருளிய பெருமாள் மற்றும் ஆழ்வாருக்கு ஆழ்வார்திருநகரி ஜீயா் சுவாமிகள், திருவாய்மொழிபிள்ளை சுவாமிகள் மற்றும் பிரபந்த கோஷ்டியாா் சிறிய திருமடல் பாடியபடி கோவிலின் உள்ளே அழைத்து சென்றனா். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் அஜித் செய்திருந்தார்.