வழிபாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா- கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

Published On 2023-08-18 04:24 GMT   |   Update On 2023-08-18 04:24 GMT
  • இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடை பெறுகிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப் பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பூஜித குரு சுவாமி தலைமை தாங்கினார். திருக்கொடியை பூஜிதகுரு ராஜசேகரன் ஏற்றி வைத்தார். பூஜிதகுரு தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து, பள்ளியறை பணி விடைகளை செய்திருந்தனர்.

பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழா அன்று இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வருகிற 28-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது.

திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடை பெறுகிறது.

Tags:    

Similar News