வழிபாடு

சிவபெருமானின் ருத்திர ரூபமான பைரவ மூர்த்தி

Published On 2023-02-27 08:49 GMT   |   Update On 2023-02-27 08:49 GMT
  • பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.
  • பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

கால பைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவர மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களின் வணங்குகிறார்கள்.

Tags:    

Similar News