தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
- அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலில் இன்று, சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 370-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
நாளை (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் கோவிலில் குவிந்து வருகிறார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சண்முகர் படங்களை வைத்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வந்து கோவிலில் குவிந்தனர்.
காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.