வழிபாடு

நாக தோஷங்களை நீக்கும் `நாகராஜா கோவில்'

Published On 2025-02-10 08:30 IST   |   Update On 2025-02-10 08:30:00 IST
  • கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.
  • மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது நாகர்கோவில் நாக ராஜா கோவில். நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது.

இங்கு வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் 'நாகர்கோவில்' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோவில் இதுவேயாகும்.

திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களை போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.

ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டுமே ஆகும். ஆதி காலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது.


வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும் போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.

அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது.

எனவே அந்த பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.

முதலில் குடிசை போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டு வந்த மன்னன் மார்த்தாண்ட வர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்.


இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலை கூரையை பிரித்துவிட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள்.

கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. இந்த கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.

இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர். இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.

கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும்.

இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.


நாகராஜர் சன்னதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும்.

அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.

இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வ நாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் இன்பம் பெருகும்.

ஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாசலை 'மகாமேரு மாளிகை' என்று அழைக்கிறார்கள். கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னதி, பாலமுருகன் சன்னதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னதி முதலியவை உள்ளன.

மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. இந்த கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது.

தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடை பெறும்.

பெருமாள் கோவில்களில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னதியின் கொடிமரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.


இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை 'தீர்த்த துர்க்கை' என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமையன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

'ஓடவள்ளி' என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது.

வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இந்த ஆலயத்தை புதுப்பித்துள்ளான். இந்த மன்னன், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தினான்.

அரசன் தொடங்கிய இந்த பழக்கம் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.

இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

நடைதிறப்பு நேரம்-பூஜைகள் விவரம்:

காலை 4 மணி: நடை திறப்பு

காலை 4.30 மணி: அபிஷேகம்

காலை 5 மணி: உஷபூஜை

காலை 10 மணி: அபிஷேகம்

பகல் 11.30 மணி: உச்சபூஜை

பகல் 12 மணி: நடை அடைப்பு

மாலை 5 மணி: நடை திறப்பு

மாலை 6.30 மணி: சாயரட்சை

இரவு 7.45 மணி: அர்த்தஜாம பூஜை

இரவு 8 மணி: நடை அடைப்பு

ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் அன்று பகலிலும், இரவிலும் நடை அடைக்கும் நேரம் மாறுபடும்.

Tags:    

Similar News