நாகராஜா கோவில் பற்றி அறிந்திடாத அரிய தகவல்கள்!
- ஐந்து தலை பாம்பின் படம் மிகவும் அகலமாக உள்ளது.
- நாகருக்கு நடத்தப்படும் பூஜைகளில் மிகவும் முக்கியமானது நூறும் பாலும் பூஜை.
பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தை நாகராஜர் ஆலயம் என்றும், நாகரம்மன் ஆலயம் என்றும் அழைப்பார்கள். அதாவது இந்த ஆலயத்தின் மூலவர் ஆண் என்று சிலரும், பெண் என்று சிலரும் கூறுவர்.
நாகராஜர் கோவிலின் உட்கோவில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றன. அவற்றுள் தெற்கே அமைந்துள்ள பாம்பின் படத்தின் அடியில் சுற்றி வளையம் போல அமைந்த அதன் உடற்பகுதியின் மேல் ஆழ்ந்த சிந்தையில் அமர்ந்துள்ள ஓர் உருவம் உள்ளது.
வடக்கே காணப்படும் ஐந்து தலை பாம்பின் படம் மிகவும் அகலமாக உள்ளது. இது பற்றி விலங்கியல் பேராசிரியர்கள் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.
நாகப்பாம்பில் ஆண், பெண் இனம் கிடையாது என்பது தவறான கருத்து, நாகப்பாம்பில் ஆண் இனமும் உண்டு. பெண் இனமும் உண்டு. நாகப்பாம்பின் படத்தை வைத்து அதன் இனத்தை அறியலாம்.
ஆண் இனத்தின் படம் அகலம் குறைந்தும், பெண் இனத்தின் படம் அகலம் கூடியும் காணப்படும் என்பது அவர்கள் கருத்து. இந்த அடிப்படையில் நாகராஜர் கோவிலில் படமெடுத்த கோலத்தில் காணப்படும் இரண்டு பாம்பின் சிலைகளில் அகலமான படத்தை கொண்ட பாம்பு பெண் தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.
இந்த இரண்டு பாம்புகளை பற்றி வழங்கப்படும் கதையும், இந்த பாம்பு சிலைகளில் வடக்கே காணப்படும் ஐந்து கற்சிலைகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளும், நாகர்கோவிலில் நாகராஜரும், நாகரம்மனும் கோவில் கொண்டு அருள்புரிகின்றனர் என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றன.
படமெடுத்த கோலத்தில் காணப்படும் இந்த இரண்டு பாம்புகளில் தெற்கே எழுப்பப்பட்டுள்ள சிலையை தர்னேந்திரர் அதாவது நாகராஜர் என்றும், வடக்கே எழுப்பப்பட்டுள்ள சிலையை நாகராணி அதாவது பத்மாவதி என்றும் சமணர்களின் நூலான உத்தரபுராணம் மூலம் நாம் அறிய முடிகிறது.
மேலும் வடக்கே காணப்படும் பாம்பின் படத்தில் கீழே தவக்கோலத்தில் அமர்ந்திருப்பது சமண சமயத்தார் வணங்கும் இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று அந்த புராணம் கூறுகின்றது.
நூறும் பாலும் பூஜை
நாகருக்கு நடத்தப்படும் பூஜைகளில் மிகவும் முக்கியமானது நூறும் பாலும் பூஜை ஆகும். நாகராஜா ஆலயத்தில் தினமும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை எல்லாவகையான அமைதியையும் தரவல்லது. கட்டணம் செலுத்தி இந்த பூஜையை பக்தர்கள் செய்யலாம்.
இந்த பூஜையின் போது மஞ்சள், அரிசி மாவு, பால், கதலிப்பழம், கமுகு ஆகிய ஐந்தும் கலந்து நாகராஜாவுக்கு நைவேத்தியம் செய்யப்படும். கதலிப்பழம் நாகராஜாவுக்கு மிகமிக விருப்பமானதாகும். எனவே இந்த நைவேத்திய பூஜை மூலம் நாகரின் அருளை பக்தர்கள் பெறமுடியும்.