வழிபாடு

21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை புன்னைநல்லூர் மாரியம்மன்  கோவில் கும்பாபிஷேகம்

Published On 2025-02-09 08:23 IST   |   Update On 2025-02-09 08:23:00 IST
  • தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.

1950-ம் ஆண்டு...இத்தலத்தில் கண்கொடுக்கும் காரிகையாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய், அம்மை நோயை போக்கி அருளும் அம்பாளாய், புண் போக்கும் பொற்புடை தெய்வமாய், தன்னை வணங்கும் அடியார்க்கு இணங்கி அருள்செய்யும் பேரன்னையாய் அருள்பாலிக்கிறாள் அம்பிகை மாரியம்மன்.


தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

முன்னதாக இக்கோவிலுக்கு பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆசியோடு, ராஜாராம் ராஜா சஹேப் கடந்த 1950-ம் ஆண்டு, தன் முன்னோர்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, 1987-ம் ஆண்டு சுப்பிரமணியன் செட்டியார் உறுதுணையோடு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. பின்னர், கடந்த 27.6.2004-ம் ஆண்டில் தற்போதைய பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே பெருமுயற்சியால், கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தற்போது சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.


அதன்படி, கடந்த 3-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4-ந்தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், முறையே 6-ந்தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர், 7-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து சனிக்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.

முறையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெறும்.

Tags:    

Similar News