திருப்பதி மலையில் படகு சவாரி சோதனை: பக்தர்கள் கடும் எதிர்ப்பு
- நீர்த்தேக்கத்தில் பலமுறை படகில் சென்று சோதனை நடத்தினர்.
- புனித யாத்திரை தளமாக இல்லாமல் போய்விடும் என பக்தர்கள் கடும் எதிர்ப்பு.
திருப்பதி:
திருப்பதி மலையில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. இதில் பாபவிநாசம் நீர்த்தேக்கம் முக்கியமானது.
இதில் படகு சவாரி விட வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. நீர்த்தேக்கத்தில் பலமுறை படகில் சென்று சோதனை நடத்தினர். விரைவில் படகு சவாரி விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்கம் புனிதமானது என பக்தர்கள் கருதுகின்றனர். ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்பாக மலையில் உள்ள பாபவிநாசம் நீர்த்தேக்கத்திற்கு சென்று புனித நீராடி பின்னர் தரிசனத்திற்கு செல்கின்றனர்.
அதேபோல் சில பக்தர்கள் தண்ணீரை எடுத்து தங்களது தலையில் தெளித்துக் கொள்கின்றனர்.
இதில் நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த புனிதமான நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்ய அனுமதித்தால் அதன் புனிதம் கெட்டு ரிசார்ட்டாக மாறிவிடும். புனித யாத்திரை தளமாக இல்லாமல் போய்விடும் என பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,தினமும் திருப்பதி மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பட கு சவாரி விடுவதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டலாம். பக்தர்கள் படகு சவாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.
சனாதான தர்மத்தை கடைபிடிக்கும் பவன் கல்யாண் வனத்துறை அமைச்சராக இருப்பதால் படகு சவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்து உள்ளனர்.