- அழகர் மலை உச்சியில் என்றும் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது.
- சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.
மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வரும் போது மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து விட்டதால் வைகை ஆற்றின் வடகரையில் இறங்கி விட்டு செல்கிறார். அப்போது தான் சாபம் கொடுத்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து வண்டியூர் புறப்பட்டு செல்கிறார்.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பது குறித்து பட்டர் ஒருவர் கூறியதாவது:-
அழகர் மலை உச்சியில் என்றும் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. அங்கு ஒருநாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுரகங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. குளித்து முடித்து பூஜைகளை செய்த பின் நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை பார்த்து மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். உடனே துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் வரும் கிருஷ்ண பட்ஷ பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகராக வந்து சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து தவமிருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியதாக வரலாறு கூறுகிறது என்று தெரிவித்தார்.