வழிபாடு

ஆதி சக்தியின் அம்சமான ஞானாம்பிகை!

Published On 2024-08-28 04:29 GMT   |   Update On 2024-08-28 04:29 GMT
  • தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
  • ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.

தேனி அருகே பச்சை பசேலென போர்வை விரித்தாற்போல பசுமையாக காட்சி அளிக்கும் உத்தமபாளையம் உள்ளது. முல்லை பெரியாறு ஆண்டு முழுவதும் ஓடுவதால் இந்த பகுதி குளுமையாக இருக்கும்.

ராணிமங்கம்மாள் ஆட்சி காலத்தில் இங்கு வசித்த சிவ பக்தர் ஒருவர் அவரது படையின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்தார். காளாத்தீஸ்வரர் பக்தரான அவர் திருப்பதி அருகில் உள்ள காளகஸ்தி சென்று தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

வயதானதும் அவரால் அங்கு செல்ல இயலவில்லை. இதனை நினைத்து வருந்திய அவர் சுவாமியை மானசீகமாக வழிபட்டார். அவருக்கு காளாத்தீஸ்வரர் இங்கேயே காட்சி கொடுத்தார். மகிழ்ந்த பக்தர் அவருக்கு கோவில் எழுப்பி காளாத்தீஸ்வரர் என்று பெயர் சூட்டினார். இதனால் இக்கோவில் தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

காளாத்தீஸ்வரருக்கு கோவில் அமைந்த பின்பு அம்பாளுக்கு சிலை செய்தனர். ஆனால் எவ்வளவு முயன்றும் சிலை சரியாக அமையவில்லை. இதனால் பல காலம் அம்பிகைக்கு சன்னதி அமைக்கப் படவில்லை.

ஒரு சமயம் உத்தம பாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தில் முல்லை பெரியாற்றில் மிதந்துவந்த ஒரு கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. இதனைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் அதை இங்கே பிரதிஷ்டை செய்தனர்.

காளகஸ்தியில் உள்ள அம்பிகைக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். அம்பிகையே இங்கு பிரசித்தி பெற்றவள் என்பதால் இவரது பெயரில் ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.

கோகிலாபுரத்தை அம்பிகையின் பிறந்த வீடாக கருதி திருக்கல்யாண விழாவின் போது ஊர் மக்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டு சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர்.

சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்துபகவான் பத்மாசனத்தில் அமர்ந்து ஜடாமுடியுடன் காட்சிதருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை, இருவரும் சிவபூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.


இந்த மூவரையும் ஒரு நாகம் சுற்றி உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி இருக்கின்றனர்.

வாஸ்து பகவானை சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது.

நடுவில் சூரியனும் சுற்றிலும் 12 ராசிகளும் உள்ளன. நிலம் பூமி, தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இந்த சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்து செல்கிறார்கள்.

காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை சன்னதிக்கு இடையில் சண்முகர் சன்னதி இருக்கிறது. அம்பாள் முருகன் இருவரையும், ஒரே சமயத்தில் தரிசிக்கும் வகையில் சன்னதிகளின் அமைப்பு இருக்கிறது.

அம் பாள் சன்னதி எதிரில் உள்ள 9 துளைகளுடன் கூடிய பலகணி (கல் ஜன்னல்) வழியாக இந்த தரிசனத்தை காணலாம். தாயார் நோய் வாய்ப்பட்டால் பிள்ளைகள் அவருக்கு நிவாரணம் வேண்டி இங்கு பூஜை செய்கிறார்கள். மகனை பிரிந்திருக்கும் பெற்றோரும் இங்கு அர்ச்சனை செய்ய வருகின்றனர்.

கோவில்களில் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா தேவி, ஆகிய சப்த மாதர்களை தரிசித்து இருப்பீர்கள். ஆனால் இங்கு அஷ்டமாதர்களை தரிசிக்கலாம்.

ஆதி சக்தியில் இருந்து 7 அம்சங்களாக 7 தேவியர் தோன்றினர் என்றும் அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவி, சப்த மாதர்களுடன் சேர்ந்து எட்டாவதாக காட்சி தருகிறார்.

அஷ்டகாளி என்றும் இந்த அமைப்பை சொல்லுவர். இது மிகவும் அபூர்வமான தரிசனம்.

இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக உள்ளார். எனவே இவருக்கும் வாயு லிங்கேஸ்வரர் என்ற பெருமை உண்டு. கண்ணப்பருக்கு காளகஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தார்.

இந்நிகழ்வின் அடிப்படையில் கண்ணப்பருக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று இரவிலும், கண்ணப்பர் குருபூஜை, காளாத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் விசேஷ பூஜை (பிப்ரவரி 5), நடக்கும். கண்நோய் உள்ளவர்கள் இந்தநாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

மனைவி சிம்ஹிகையுடன் ராகு மற்றும் சித்திரலேகாவுடன் கேதுவிற்கு பின்பு சன்னதி இருக்கிறது.

ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை), இவர்கள் சன்னதியில் சர்ப்ப தோஷ பரிகார ஹோமம் நடக்கிறது. நாக தோஷத்தால் திருமணம், மற்றும் பல்வேறு தடைகளை சந்திப்பவர்கள் இதில் தரிசிக்கின்றனர்.

ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் ராகு-கேது பெயர்ச்சியின் போது இவர்களது சன்னதியில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இச்சன்னதியில் 7 நாகதேவதையர், சிலை சிற்பமாகவும் காட்சிதருகின்றனர்.

குபேரர் சன்னதி பிரகாரத்தில் ஐஸ்வர்ய லட்சுமியுடன் குபேரர் காட்சிதருகிறார். இவருக்கு பின்புறம் மகாலட்சுமி இருக்கிறார். அட்சயதிரிதியை தினத்தில் இந்த சன்னதியில் விசேஷ பூஜை நடக்கும்.

கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு கருப்பு நிறம், கல்விக்கு அதிபதியான புதனுக்கு பச்சை நிறம் உகந்தது. ஆனால் இங்கு சனீஸ்வரருக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவிக்கிறார்கள். கல்வியில் சிறப்பிடம் பெற பக்தர்கள் வஸ்திரம் அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது.

Tags:    

Similar News