வழிபாடு

இறைவனுக்கு கொண்டை கடலை மாலை அணிவிக்கலாமா?

Published On 2023-07-06 07:40 GMT   |   Update On 2023-07-06 07:40 GMT
  • தானியங்கள் என்பது இறைவன் நமக்கு அளித்த பிரசாதம்.
  • சனி பகவானுக்கு உரிய தானியம் எள்ளு ஆகும்.

நவகிரஹங்களில் உள்ள குருபகவானுக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை என்பதால் அதனை மாலையாகக் கோர்த்து முதலில் குருபகவானுக்கு அணிவித்தார்கள். தட்சிணாமூர்த்தியை குருபகவானாக எண்ணி வணங்கியதால் நாளடைவில் அந்த மாலை அவருக்கும் அணிவிக்கப்பட்டு வருகிறது.

குருபகவானுக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை என்பது போல், சனி பகவானுக்கு உரிய தானியம் எள்ளு ஆகும். ஆனால் இந்த தானியம் உருவத்தில் சிறியதாக இருப்பதால் இதனை யாரும் மாலையாகக் கோர்த்து சனிபகவானுக்கு அணிவிக்க முயற்சிக்கவில்லை.

தானியங்கள் என்பது இறைவன் நமக்கு அளித்த பிரசாதம். இந்த தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து அவற்றை இறைவனுக்கு நைவேத்யம் செய்து எல்லோருக்கும் வழங்க வேண்டும். இதற்காகத்தான் பெரியோர்களால் இந்த தானியங்கள் இந்த கிரஹத்திற்கு உரியது என்று வகுக்கப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவர் இறைவனை அலங்கரித்துப் பார்ப்பதற்காகக் கொண்டைக்கடலை மாலையாகக் கோர்த்து அணிவித்ததால் அதுவே தற்போது பெரும்பாலானோரின் பழக்கமாக மாறிவிட்டது.

கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்ப்பதற்கு பதிலாக அதனை அவித்து சுண்டலாக சமைத்து, அதனை இறைவனுக்கு நைவேத்யம் செய்து எல்லோருக்கும் விநியோகம் செய்தால் அதுவே இறைவனுக்கு முழுமையான சந்தோஷத்தைத் தரும்.

-பாலு

Similar News