சகல பிரச்சனைகளையும் நீக்கும் `கொங்கராயகுறிச்சி சட்டநாதர்'
- அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
- நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.
கோவில் தோற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர் ஆலயம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு வாழ்ந்த கொங்குராயர் என்னும் மன்னரால், பழமையான இவ்வாலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவ்வூர் 'கொங்கராயகுறிச்சி' என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் பற்றி, புராணங்களிலும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 'நவ லிங்க புரம்' என்பது மிகவும் விசேஷமானது. வல்லநாடு திருமூலர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், தெற்குகாரசேரி குலசேகரநாதர், புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென் நக்கர், ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர், புறையூர் அயனீஸ்வரர், காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆகிய ஆலயங்கள் நவ லிங்க புரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே நாளில் ஒன்பது கோவிலையும் சுற்றி வரும் வாய்ப்பு கொண்டதாக 'நவ லிங்கபுரம்' உள்ளது.
நவ லிங்கபுரத்தில் இரண்டாவது தலம்தான் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர். சீர்காழியைப் போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இது 'தென் சீர்காழி' என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமானின் முக்கியமான அவதாரங்களில் ஒன்று பைரவர். உக்கிரம் நிறைந்த இந்த பைரவர், நம்முடைய பயத்தை போக்குபவராக போற்றப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு அளிக்க நினைப்பவர்களின் எண்ணங்களை முறியடிப்பார்.
பாவம், குரோதம், காமம் போன்றவற்றில் இருந்து பக்தர்களை விடுபடச் செய்வார். 'பை' என்றால் 'படைப்பு'. 'ர' என்றால் 'வாழ்க்கை'. 'வா' என்றால் 'அழித்தல்'. இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார்.
கொங்கராயகுறிச்சியில் அஷ்டமி தேய்பிறை அன்று, அஷ்ட பைரவருக்குப் பூஜை நடத்தி வருகிறார்கள். இதனால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.
வியாபாரம் செழிக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், திருமணத்தடை அகலும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இதனால் இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.
இந்த ஆலயம் 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி, ஆற்று மணலில் புதைந்து விட்டது. அதன் பிறகு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் ஒன்று கூடி ஆற்று மணலில் புதைந்து கிடந்த இந்த அற்புதக் கோவிலை தோண்டி வெளிக்கொண்டு வந்தனர்.
அந்த சட்டநாதர் ஆலயத்தை, பக்தர்கள் பெரும் முயற்சியால் தற்போதும், மேலும் மேலும் தோண்டும் பணியைச் செய்து வருகிறார்கள்.
நாம் நுழையும் போது சாலையில் இருந்து பூமிக்குள் இறங்கிதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். அதற்கும் தற்போது படிக்கட்டுகள் பக்தர்கள் வசதியாக இறங்க வழிவகை செய்திருக்கிறார்கள்.
முதலில் கொடிமரம் மற்றும் நந்தியை தாண்டி, கோவிலுக்குள் நுழைகிறோம். வலதுபுறம் பைரவர், சட்டநாதராக தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். கோவிலைச் சுற்றி வருகிறோம்.
கோவிலுக்கு இடதுபுறம் கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி - தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
கோவிலுக்குள் நுழைந்தால் தெற்குநோக்கி பொன்னுருதி அம்மாள், 'தேடி வருபவர்களுக்கு உறுதியாக பொன்னும் பொருளும் அள்ளித் தருவேன்' என கருணை முகத்தோடு காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கி வீரபாண்டீஸ்வரர் என்ற பெயருடன் சிவலிங்க வடிவில் ஈசன் காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜையும், தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு பூஜையும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பிரதோஷம், மகாசிவராத்திரி, மாத சிவராத்திரி, சோமவாரம், திருக்கார்த்திகை, ஐப்பசி திருமணம், திருவாதிரை பூஜைகளும் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, இந்த கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்வாலயம் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும். பில்லி சூனிய பிரச்சினை அகலும். தொழில் போட்டியில் வெற்றி பெறலாம்.
நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். இழந்த பொருட்களை மீட்கலாம். மறைமுக எதிரிகள் விலகுவர். தொழில் போட்டி அகலும். வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும் என்கிறார்கள்.
இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில் மாதந்தோறும் உழவாரப்பணி நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மெயின்ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கருங்குளம். இங்கு இறங்கி ஆற்றுப்பாலத்தைத் தாண்டினால், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.