வழிபாடு

ராமேசுவரம் கோவிலில் சிவராத்திரி திருவிழா தொடங்கியது- 26-ந்தேதி தேரோட்டம்

Published On 2025-02-19 07:47 IST   |   Update On 2025-02-19 07:47:00 IST
  • பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
  • மார்ச் 1-ந் தேதி அன்று சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 10.45 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கொடிமர மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் 2-ம் நாளான இன்று(புதன்கிழமை) காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்திலும், இரவில் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

3-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கெந்த மாதன பர்வதம் (ராமர் பாதம்) மண்டகப்படிக்கு செல்கிறார்கள். அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

இதை முன்னிட்டு, கோவில் நடையானது நாளை அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 6 மணிக்கு மேல் கோவில் நடையானது சாத்தப்பட்டு இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.

திருவிழாவின், 9-ம் நாளான வருகிற 26-ந்தேதி சிவராத்திரி அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

10-ம் நாளான வருகிற 27-ந்தேதி அன்று சாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி அன்று சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News