திருமண வரம் அருளும் `பரங்கிப்பேட்டை காசி விஸ்வநாதர்'
- நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது.
- நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும்.
கோவில் தோற்றம்
நம் நாட்டின் மீது பல்வேறு படையெடுப்புகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த படையெடுப்புகளின் போதெல்லாம், கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், நம் முன்னோர்கள் பொன் - பொருள்களை கோவில்களில் பாதுகாப்பாக வைத்திருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
அப்படி ஒரு கோவிலை சிலர் சிதைக்க முற்பட்டபோது, மக்களின் பெரு முயற்சியால் அந்த ஆலயம் காப்பாற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, ஆற்காடு நவாப் ஆட்சி காலத்தில், 'முத்துகிருஷ்ணாபுரி' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் இவ்வூர் வணிக இடமாகக் கருதப்பட்டது.
கோவில்கள் மிக அதிகம். அதில் பல கோவில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், பரங்கிப்பேட்டையில் உள்ள விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் கோவில்.
இவ்வாலயம் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
இவ்வாலயம் திப்புசுல்தான் காலத்தில் இவ்வூரில் உள்ள பாப்பான்கோடி தெருவில் சிறு ஆலயமாக அமையப்பெற்று இருந்தது. சில காரணங்களால் அந்த ஆலயத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த, மன்னன் உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவுப்படி காவலர்கள், அந்த ஆலயத்தை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து "எங்கள் உயிரே போனாலும் இவ்வாலயத்தை நாங்கள் அப்புறப்படுத்த விடமாட்டோம்" என்று போராடினர். இருப்பினும் ஆலயத்தை அகற்றுவதற்கான நெருக்கடி அதிகரித்ததால், ஆலயம் அதே இடத்தில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதிய ஊர் மக்கள், அதே ஊரில் உள்ள வண்ணாரபாளையம் என்ற இடத்தை கோவில் அமைக்க தேர்வு செய்தனர்.
அங்கு முதலில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து, காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியின் திருவுருவங்களை வைத்து வழிபடத் தொடங்கினர். பின்னாளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் கற்கோவிலாக கட்டப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.
கோவிலின் முன்னால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் சுதைச் சிற்பங்களாக காட்சிதர இருபுறமும் நந்திகள் அமர்ந்திருக்க வணங்கிவிட்டு உள்ளே வந்தால், கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தின் இடது பக்கம் விநாயகர், வலது பக்கம் சுப்பிரமணியர் அருள்கின்றனர்.
கோவிலில் தெற்கு முகம் நோக்கி நான்கு திருக்கரங்களோடு விசாலாட்சி அம்மன் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். அர்த்த மண்டபத்தின் உள்ளே சூரியன் -சந்திரன் இருவரும் காசி விஸ்வநாதரை வணங்கியபடி எழுந்தருள, கருவறையில் காசி விஸ்வநாதர் கிழக்கு திசை நோக்கி வட்ட பீடத்தில் பாண லிங்கமாய் அற்புதமாய் காட்சி தருகிறார்.
பீடத்தின் அடியில் மூல எந்திரம் அமைப்பது வழக்கம். ஆனால் இங்கு நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். தவிர பிரகாரத்தில் சித்தி கணபதி, வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர், ஆறு முகங்களுடன் அருள்கிறார். மேலும் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், நடராஜர், பஞ்சமூர்த்தி என அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதி அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் 21 வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும். குழந்தை வரம் கேட்பவர்கள், இறைவனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பாக்கியம் கிடைத்ததும் சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் அரளிப்பூ மாலை சூட்டி இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
கடலூர் - சிதம்பரம் இரு மார்க்கத்தில் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கடலூரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.