பக்தர்களின் இல்லம் சென்று அருளும் `செம்புலிங்க அய்யனார்'
- அய்யனார் அருள்பாலிக்கும் இடமானது சிறிய வனப்பகுதி ஆகும்.
- செம்புலிங்க அய்யனார் சுயம்புவாக தோன்றியவர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் சூழ்ந்த இடத்தில் செம்புலிங்க அய்யனார் கோவில் அமைந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்குபவர், இங்கு அருள்பாலிக்கும் செம்புலிங்க அய்யனார்.
இவர் சுயம்புவாக தோன்றியவர். சிற்பிகளால் செதுக்கப்படாமல், இறைவனின் பேரருளால், ஒரு கல்லில் தானாகவே தோன்றும் தெய்வ உருவத்தை 'சுயம்பு' என்று போற்றி வணங்குவார்கள்.
இவ்வாலயத்தில் மூலவராக அருளும் பூரணி - புஷ்கலாம்பாள் சமேத செம்புலிங்க அய்யனார் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். முதனை கிராமத்து மக்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கும் இவர் வேட்டைக்குச் செல்லும்போதும், திருவிழா காலங்களில் நடைபெறும் வீதி உலா நிகழ்ச்சியின் போதும், ஒவ்வொரு பக்தர்களின் இல்லங்களையும் தேடி வந்து அருள்பாலிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த வீதி உலாவின்போது செம்புலிங்க அய்யனார், யானை மீது ஏறி மேள - தாளம் முழங்க, அரோகரா கோஷங்களுடன் சல்லடம் கட்டி, வில்-அம்பு, கேடயம், சக்கரம் போன்ற ஆயுதங்களுடன் தீவட்டி சுடர் தகதகப்பில் வலம் வருவார்.
இந்த கோவிலின் பின்புறம் வடக்கு திசை நோக்கி செல்லியம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கே மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதுடன், தொட்டில் கட்டி வணங்கினால், செல்லியம்மன் மழலை செல்வத்தை வழங்கி குறையை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சபரிமலை தர்ம சாஸ்தாவிற்கு கருப்பு சாமியும், கருப்பண்ணசாமியும் காவல் தெய்வங்களாக விளங்குவது போல, செம்புலிங்க அய்யனாருக்கு உத்தண்டி வீரன், அகோர வீரபத்திரர், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் ஆகிய சாமிகள் காவல் தெய்வங்களாக விளங்கி அருள்பாலிக்கின்றனர்.
செம்புலிங்க அய்யனாருக்கு பிரதான காவல் வீரனாக விளங்கும் உத்தண்டி வீரனுக்கு கிழக்கு திசை நோக்கி தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு திசையில் உள்ள வாசல் வழியாக சென்று தான் உள்ளே இருக்கும் உத்தண்டி வீரன், கொப்பாட்டி அம்மனை வணங்க முடியும்.
துரைராஜ கம்பீர உத்தண்டி மகா வீரரான இவர், சிவப்பு நிற குதிரை மீது அமர்ந்து வில்-அம்பு, கேடயம், வேல் போன்ற 18 ஆயுதங்கள் தாங்கி, முறுக்கிய மீசையுடன் பட்டாடை அணிந்து பாதத்தில் சிலம்பு பூட்டி கிடுகிடு தப்பட்டை மத்தள வாத்தியங்கள், வீணை இசை முழங்க அய்யனாருக்கு முன்பாக, காவலாக பவனி வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இவரை வணங்குவதால் எதிரிகளால் சூழப்படும் தடைகள் அகலும். வேண்டும் வரங்கள் வேண்டிய உடனேயே கிடைக்கும். மனதிற்கு தைரியம் அதிகரிக்கும்.
அறிவாற்றல் தரும் அகோர வீரபத்திரர்:
மற்றொரு காவல் தெய்வமான அகோர வீரபத்திரர் தெற்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். இவரை வணங்குவதால் ஞானம் கிடைக்கும். அறிவாற்றல் பெருகும். தடைகள் அகலும். தோஷங்கள் நீங்கும்.
இதேபோல கருப்பண்ணசாமி கருப்பழகியுடன் மேற்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். இவர் மாந்திரீகத்தால் ஏற்படும் தீமைகளை சரி செய்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்.
பொம்மி சமேதரான மதுரை வீரன், புலி வாகனத்தில் கிழக்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். முப்பூசை படையின் போது பலி கொடுப்பதற்கான உத்தரவை இவரே வழங்குவதாக கூறப்படுகிறது.
தமக்கு வீரன், கிழக்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் தமக்கையை கையில் வைத்து காட்சி தருகிறார். இவர் செம்புலிங்க அய்யனார் பவனி வரும்போதும், வேட்டைக்கு செல்லும்போதும் கிடுகிடுதப் பட்டை முழங்கி முன்னே செல்வார்.
இத்தகைய சிறப்புமிக்க இந்த செம்புலிங்க அய்யனார் சுவாமிக்கு தைப்பூசத்தன்று சித்தர் ஏரியில் வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு திரண்டு வந்து வேல் மூழ்குதல் காட்சியை கண்டுகளிப்பார்கள்.
அன்றைய தினம் இந்தக் காட்சியை காண வரும் பக்தர்கள் வைத்த கோரிக்கையை செம்புலிங்க அய்யனார் உடனடியாக நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முள் செடிகள் வளராது:
செம்புலிங்க அய்யனார் அருள்பாலிக்கும் இடமானது சிறிய வனப்பகுதி ஆகும். இந்த காட்டில் அரிய செடி-கொடி, பல்வேறு மூலிகைகள் நிறைந்துள்ளன. இந்தப்பகுதியை ஆண்ட மகாராஜாவும், மகாராணியும் காட்டின் உள்ளே சென்று செம்புலிங்க அய்யனாரை வழிபட வரும்போது, மகாராணியின் புடவை அப்பகுதியில் இருந்த முள் செடியில் பட்டு கிழிந்துள்ளது.
இதனால் மனமுடைந்த மகாராணி இந்த காட்டில் முள் செடிகள் இருக்கக்கூடாது என்று சாபமிட்டார். அன்று முதல் இன்று வரை இந்த காட்டின் உள்ளே ஒரு முட்செடி கூட வளரவில்லை என்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
அமைவிடம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர் ஏரியின் வலதுபுறத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.