வழிபாடு

மகா சிவராத்திரி பற்றிய அரிய தகவல்கள்!

Published On 2025-02-19 09:22 IST   |   Update On 2025-02-19 09:22:00 IST
  • சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி.
  • சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன.

* சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

* சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.

* 'சிவாயநம' என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை.

* 'மகா' என்றால் பாவத்தில் இருந்து விடுபடுவது என்றும் பொருள் படும். சிவராத்திரி விரதம் நிச்சயம் பெரிய பாவங்களைப்போக்கும்.

* ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

* எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.


* ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.

* கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

* கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் ஆகிய நறுமணப்பொருட்களை கலந்து தயாரிக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் தான் சிவபெருமானுக்கு மிகவும் பொருத்தமான வழிபாடாக கருதப்படுகிறது.

* சனிபிரதோஷ தினத்தன்று வரும் சிவராத்திரிக்கு 'கவுரிசங்கரமண மகாசிவராத்திரி' என்று பெயர். அந்த சிவராத்திரியில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

* சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

* சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

* சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.


* சிவராத்திரி தினத்தன்று 1.ஸ்ரீபவாய நம, 2.ஸ்ரீசர்வாய நம, 3.ஸ்ரீபசுபதயே நம, 4.ஸ்ரீருத்ராய நம, 5. ஸ்ரீஉக்ராய நம, 6.ஸ்ரீமகாதேவாய நம, 7.ஸ்ரீபீமாய நம, 8.ஸ்ரீஈசாராய நம என்ற 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.

* சிவராத்திரி தினத்தன்று கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்வது கூடுதல் பலன்கனைத் தரும். சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

* சிவராத்திரி தினத்தன்று நமது உடம்பில் உள்ள ஜீவ ஆத்மா எழும்பி பரமாத்மாவோடு இணைவதற்கு முயற்சி செய்யும். எனவே ஒவ்வொரு மாதம் சிவராத்திரி தினத்தன்றும் ஈசனை வழிபடுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

* சிவராத்திரி தினத்தன்று நமது முதுகுத் தண்டு நேராகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஜீவ சக்தியை எழுப்ப முடியும். எனவே தான் சிவராத்திரி தினத்தன்று தரையில் முதுகு படும்படி படுக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் சிவராத்திரி கண்விழிக்கச் சொல்கிறார்கள்.

* சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

* சிவராத்திரி தினத்தன்று விடிய, விடிய கண் விழித்து இருக்க இயலாதவர்கள் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையாவது கண் விழித்து தரிசனம் செய்வது நல்லது.

* சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

* சிவராத்திரி தினத்திற்கு மிகப்பெரிய துதிகள், புராண பாடல்கள் பாட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமானது.

* சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* சிவராத்திரி நான்கு கால பூஜைகளில் விடியற்காலையில் நடைபெறும் நான்காம் கால பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தால் எண்ணற்ற நல்ல பலன்களை பெற முடியும் புராதன நுல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* சிவராத்திரி பூஜையை வீட்டிலும் செய்யலாம். சிவபெருமான் படத்துக்கு பிச்சி பூ, செண்பக பூ, தாமரை பூ தூவி வழிபடலாம். வில்வம் தவறாமல் சூட்ட வேண்டும். மாதுளை பழத்தை நெய்வேத்தியமாக படைக்கலாம். இப்படி வழிபட்டால் அசுவதமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.


* சிவராத்திரி விரதம் இருந்தால் விஷ்ணு சக்ராதயுத்தத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

* சிவராத்திரி விரதம் இருந்து வழிபட்டால் துளிஅளவு அன்பு உள்ளம் இல்லாதவர்களுக்கு கூட ஈசனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

* சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மறுநாள் காலையில் அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும். அதுவும் சூரியன் உதித்த 2 1/2 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும்.

* சிவராத்திரி விரதம் மன அமைதியைத் தரும். சிவராத்திரியன்று 4 கால பூஜைக்கு தேவையான பொருட்களை சிவாலயங்களுக்கு பக்தர்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

* சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

* சிவராத்திரியன்று இரண்டாம் கால பூஜை நேரத்தில் (இரவு 11 மணி முதல் 12.30 மணி வரை) கிரிவலம் வந்தால் மனதில் நினைத்த காரியம் வெகு விரைவில் முடியும். பிறவி இல்லா பேரின்பம் கிடைக்கும்.

* சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

* சிவராத்திரியன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

* சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும். மூன்று வேளையும் வணங்கினால் யாகங்கள் செய்வதால் உண்டாகும் பலன் கிடைக்கும்.

* சிவாலயங்களில் நந்தியை வழிபடும் போது தொடாமல் குனிந்து வணங்க வேண்டும்.

* சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

* தர்ப்பையில் லிங்கம் செய்து வழிபட்டால், அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத்தரும்.

* திங்கட்கிழமை வரும் சிவராத்திரிக்கு யோக சிவராத்திரி என்று பெயர்.


* திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

* திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

* பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் 'சங்கர – நாராயண' வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் 'பாண லிங்கம்' இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

* பொதுவாக பகல் பொழுதை சிவனுக்கும், இரவு பொழுதை அம்பிகைக்கும் உரியதாக சொல்வார்கள். ஆனால் இரவு முழுவதும் அம்பிகை விழித்திருந்து பூஜை செய்து அந்த இரவை சிவனுக்கு அர்ப்பணித்ததால் அது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

* மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

* மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலையில் லட்ச தீபம் ஏற்றப்படும். அதை காண்பது சிறப்பானது.

* யார் ஒருவர் சிவராத்திரி விரதத்தை மனப்பூர்வமாக கடைபிடிக்கிறார்களோ அவர்களது ஆயுள் நீடிக்கும். பிறவிப் பயனை மிக எளிதாக அடையலாம்.

* வில்வத்தில் லட்சுமி இருப்பது போல தாமரை மலரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

Tags:    

Similar News