வழிபாடு

பழனி முருகன் கோவிலில் தங்க கோபுரத்தை சுத்தப்படுத்தும் பணி

Published On 2022-11-24 13:00 IST   |   Update On 2022-11-24 13:00:00 IST
  • 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இதற்கிடையே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.

கோபுரங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடந்தது. தற்போது கும்பாபிஷேக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணி முடிவு பெற்றுள்ளன. இந்தநிலையில் தங்க கோபுரத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரத்தை சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகள் முடிவு பெற்றவுடன், அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News