மாமல்லபுரம் தலசயன பெருமாள் திருக்கல்யாணம்
- 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
- தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.