சபரிமலையில் இன்று மண்டல பூஜை: மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறப்பு
- மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
- இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் 41 நாட்களாக நடந்து வந்த மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு நேற்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதே அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளித்தார். பகல் 12 முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடை பெற்றது.
பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக இன்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 60 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை முடிந்து இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவார்கள். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறு கிறது.
மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் அனும திக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை மண்டல பூஜை காலத்தை போன்றே கடைபிடிக்கப்பட உள்ளது. மேலும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களையும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களையும் மெய்நிகர் வரிசை முறையில் அனும திக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.
அந்த நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு எதுவும் தற்போது எடுக்கப்படவில்லை.