மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-11)
- கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம்.
- உன் திருவடிகளைப் பாடி, உன் நினைவிலேயே வாழுகின்றோம்.
திருப்பாவை
பாடல்:
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
"கன்றுகளை ஈன்ற பசுக்களிடம் இருந்து பால் கறப்பவர்கள், ஆயர் குலத்தினர். இருந்தாலும் வலியவரும் பகைவர்களுடன் போர் செய்து அவர்களின் வீரம் அழியும்படி செய்வார்கள். அந்த கோபாலர்களின் குலத்தில் பிறந்த, புற்றில் உள்ள நாகத்தின் படம் போன்ற மறைவிடத்தையும், காட்டில் திரியும் பெண் மயில் போன்ற சாயலையும் உடையவளே! புறப்படுவாய்! உறவினர்களும், தோழியருமாகிய எல்லோரும் உன் முற்றத்திலே கூடி கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம். நீ சிறிதேனும் எங்களுடன் பேசாமல் உறங்குவதன் பொருள் என்ன?
திருவெம்பாவை
பாடல்:
மெய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோங் காண்! ஆரழல்போல்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்யார்கள் உய்யும் வகையெல்லாம் உய்த்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
ஐயனே! அகன்ற குளங்களில் மொய்க்கின்ற வண்டுகளையுடைய மலர்கள் நிறைந்திருக்கின்றன. அதில் மூழ்கி, 'முகேர்' என்று ஓசை எழும்படி கைகளால் நீரைக் குடைந்து குடைந்து நீந்தி உன் திருவடிகளைப் பாடுகின்றோம். உன் திருவடிகளைப் பாடி, உன் நினைவிலேயே வாழுகின்றோம். நெருப்பைப் போன்ற சிவந்தவனே! வெண்ணீறு அணிந்தவனே! சிறிய இடையுடன் மை தீட்டிய கண்களை உடைய பார்வதியின் கணவனே! உன் அடியவர்களை ஆட்கொண்டு விளையாடுகின்றாய். அத்தகைய உன் அடியவர்களின் வழியிலேயே நாங்கள் செல்கிறோம். எங்களைக் கைவிடாமல் ஏற்றுக்கொண்டு காப்பாற்றுவாயாக.