மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-16)
- நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
- உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே!
திருப்பாவை
பாடல்:
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!
நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கொடி பறக்கின்ற தோரண வாசலைக் கொண்ட ஆயர்பாடியின் தலைவனாய் விளங்குகின்ற நந்தகோபனின் அரண்மனையைக் காவல் புரிபவரே! மணிகள் பொருத்தப்பட்ட கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். கண்ணன் ஆயர் சிறுமிகளான எங்களின் நோன்புக்கு உரிய அருளை தருவதாக வாக்களித்துள்ளான். அவனைத் துயிலெழுப்ப தூய்மையான மனதுடன் வந்துள்ளோம். உன் வாயினால் மறுத்துச் சொல்லிவிடாதே. நேர்த்தியான நிலையுடன் பொருந்தியுள்ள கதவுகளைத் திறந்து விடுவாய்.
திருவெம்பாவை
பாடல்:
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
இந்த கடல் நீரைச் சுருக்கி வற்றச் செய்து மேலெழும்பும் உமையம்மையின் நிறத்தையொத்த கருநீல மேகமே! இறைவியின் இடையைப் போல மின்னி, அவள் கால்களில் அணிந்துள்ள சிலம்பு போன்ற இடியை இடிக்கச் செய்து, அவள் அழகிய புருவம் போன்ற வானவில்லைத் தோன்றச் செய்வாய். பார்வதியைப் பிரியாத பரமசிவன் தன் அடியார்கள் மேல் இன்னருளைப் பொழிவதைப் போல நீயும் மழையைப் பொழிவாயாக.