குழந்தை வரம் அருளும் கருங்குளம் வெங்கடாசலபதி
- கருங்குளம் திருத்தலத்தை ‘தென்திருப்பதி’ என்று அழைக்கிறார்கள்.
- உறங்கா புளிய மரம் உள்ளது. இந்த மரம் பூக்கும், ஆனால் காய்க்காது.
கோவில் தோற்றம்
வகுளகிரி சேத்திரம் என அழைக்கப்படும் தாமிரபரணி கரையில் உள்ள கருங்குளம் திருத்தலத்தை 'தென்திருப்பதி' என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலில் உருவம் இல்லாத சந்தன கட்டையில் வெங்கடாசலபதி மூலவராக உள்ளார்.
அரியும் சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வண்ணமாக உருவமற்ற நிலையில் வெங்கடாசலபதி உள்ளார். பலநூறு வருடங்களாக நெய், சந்தனம், பால் போன்ற திரவத்தினால் அபிஷேகம் செய்தும், சந்தன கட்டையில் உள்ள இந்த மூலவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுவே இறைவனின் அருள் கடாட்சமாகும்.
திருபாற்கடலில் விஷ்ணுவைக் காணச் சென்றார், நாரதர். அங்கு அவர் இல்லை. நாரதர் தனது மனக்கண்ணில் விஷ்ணு இருக்கும் இடத்தைப் பார்த்தார். விஷ்ணு கருட வாகனத்தில் லட்சுமியோடு தாமிரபரணிக் கரையில் வகுளகிரியில் இருந்தார்.
ஆதிசேஷன் வகுளகிரி உருவத்தில் இருக்க பகவானை சுற்றி மலை மீது தேவர்கள் வீற்றிருந்தனர். உடனே நாரதரும் இங்கே வந்து வணங்கி நின்றார். இங்கு ஒரு உறங்கா புளியமரம் உள்ளது. இந்த மரம் பூக்கும்; ஆனால் காய்க்காது.
வடநாட்டில் சுபகண்டன் என்ற அரசன், கண்டமாலை நோயால் பாதிக்கப்பட்டான். அவனுக்கு கழுத்தில் புழு வந்து நாற்றம் எடுத்தது. நோயைத் தீர்க்க பெரிய வைத்தியர்களாலும் முடியவில்லை. திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வணங்கினான். அவன் கனவில் வெங்கடாசலபதி தோன்றினார்.
"சந்தனக் கட்டையால் ஒரு தேர் செய். அதில் இருந்து உருவம் இல்லாமல் ஒரு கட்டை மிச்சமாகும். அதை தாமிரபரணிக் கரையில் உள்ள வகுளகிரி மலையில் வைத்து வழிபடு. உன் நோய் தீரும்" என்றார். அதுபோலவே செய்து, கருங்குளம் வகுளகிரி மலையில் உருவமற்ற சந்தன கட்டையை மூலவராக பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
சிங்கநாதன் என்னும் அரசன் தனது 30-வது வயதில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டான். பல இடங்களில் வைத்தியம் பார்த் ததும் எந்த பலனும் கிடைக்கவில்லை. முடிவில் மன வருத்தம் அடைந்து, நாரதரை சந்தித்து தனது நிலையை கூறி அழுதான்.
அப்போது நாரதர், "அரசே நீ சென்ற பிறவியில் கார்முகன் என்னும் வேடனாகப் பிறந்தாய். ஒரு முறை காட்டில் வேட்டையாடச் சென்றபோது, மான் வடிவில் தன் துணைவியோடு விளையாடிக் கொண்டிருந்த முனிவரை அம்பு கொண்டு தாக்கினாய்.
அந்த முனிவர் இறக்கும் தருவாயில், 'இதே போல் வலியால் நீ துடித்து ரணப்படுவாய்' என்று சாபமிட்டு விட்டு சொர்க்கம் அடைந்தார். அந்த முன் ஜென்ம சாபமே தற்சமயம் உன்னை பீடிக்கிறது.
இந்த சாபம் தீர வகுளகிரி மலைமேல் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்" என்றார். அரசனும் அவ்வாறே செய்து தனது சாபத்தை நீக்கிக் கொண்டான்.
வேதவிற்பன்னர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளோடு கங்கை சென்றார். முன்னதாக தனது உடமைகளை அவ்வூரில் இருந்த செல்வந்தனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். திரும்பி வந்து கேட்ட போது, அந்தச் செல்வந்தன் "நீ என்னிடம் எதுவும் தரவில்லை" என கையை விரித்தான்.
அந்த வேதியர் கொடுத்த சாபத்தால் செல்வந்தனுக்கு, தீராத வயிற்று வலி உண்டானது. பாவம் செய்ததை அறிந்து அது நீங்க பகவானிடம் உருகி வேண்டி நின்றான், அந்த செல்வந்தன். பின்னர் இத்தலம் வந்து தன் நோய் நீங்கப் பெற்றான்.
திருமாலின் பக்தர்களான கோதரன்- மாலதி தம்பதிகளுக்கு நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் வருத்தத்தில் வாழ்ந்தனர். ஒரு முறை வேதியர் வடிவில், திருமால் அவர்களின் இல்லம் சென்றார்.
வகுளகிரி மலை வந்து விஷ்ணுவை வணங்கி பணிவிடை செய்ய கூறினார். தம்பதியினர் அவ்வாறே வணங்கி பிள்ளை பேறு அடைந்தனர். இப்படி பல அற்புதங்கள் நிகழ்ந்த தலமாக, இந்த கருங்குளம் வெங்கடாசலபதி ஆலயம் திகழ்கிறது.
முன்காலத்தில் மலை மீது ஏறிச்செல்ல சாலை வசதி எதுவும் கிடையாது. ஒரு முறை கும்பாபிஷேகப் பணிக்காக வண்டியில் கல்லைக் கொண்டு செல்ல அதிகமான கூலி கேட்டார், வண்டிக்காரர். மலை மீது இருப்பதால் கோவில் நிர்வாகத்தினரும் 'சரி' என ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அந்த வண்டி, உறங்கா புளிய மரம் அருகே வந்தபோது அச்சு முறிந்தது. வண்டிக்காரரும், மாடும் அதிசயமாக உயிர் தப்பினர். சோதித்த போது வண்டியின் அச்சாணி மலையின் அடிவாரத்திலேயே விழுந்து கிடந்தது.
அச்சாணி இல்லாமல் மலை மீது வண்டி வந்ததை எண்ணி வண்டிக்காரர் அதிர்ந்து போய் விட்டார். பகவானின் சக்தியை எண்ணி 'எனக்கு கூலியே வேண்டாம்' என கூறிச் சென்று விட்டார்.
சைவம், வைணவம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த பெருமாள் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அடிவாரத்தில் உள்ள சிவபெருமானை வணங்கி விட்டுத்தான் மலை மீது ஏறுகிறார்கள்.
மார்த்தாண்டேஸ் வரர் என்ற அரசன், இந்த சிவன் கோவிலைக் கட்டினார். எனவே சிவனுக்கு 'மார்த்தாண்டேஸ்வரர்' என்றும், இவ்வூருக்கு 'மார்த்தாண்டேஸ்வரர் கருங்குளம்' என்றும் பெயர் இருந்தது.
தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, மலையடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் தாயாரையும், சிவனையும் வணங்கி விட்டு, தம்பதி சகிதம் இருக்கும் நவக்கிரகங்களை வணங்கி விட்டு எம்பெருமான் வெங்கடா சலபதியைக் காண படியேற வேண்டும். மலையின் பின் பகுதியில் இருந்து வாகனம் ஏறிச்செல்ல தனிவழி உண்டு.
ஆனாலும் படி ஏறிச்செல்வதே உத்தமமாகும். கோவிலுக்குச் சென்று அங்கே பிரதான தெய்வமாக விளங்கும், சந்தனகட்டையில் உள்ள எம் பெருமானைத் தரிசித்து விட்டு, அவரின் வலது புறம் உள்ள உறங்கா புளியமரத்தைத் தரிசித்து விட்டு வலம் வரவேண்டும்.
அதன்பிறகு முதன்மையான கோவிலாக விளங்கும் பழைய கோவிலுக்கு வரவேண்டும். இங்கு பெருமாள் எதிரே கருடன் அமர்ந்திருக்க, கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் வெங்கடாசலபதி காட்சி அளிக்கிறார். அவர் முன்பே உற்சவர்கள் உள்ளார்கள்.
இங்குதான் பக்தர்களுக்கு ஜடாரியாக நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும். முன் வாகனத்தில் ஆஞ்சநேயர் உள்ளார். அவரிடம் பக்தர்கள் தங்களின் பிரச்சினையை எழுதி, அதனுடன் 'ஸ்ரீராம ஜெயம்' எழுதி மாலையாக அணிவிக்கிறார்கள்.
இந்தக் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும். மற்ற மாதங்களில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
இந்த கோவில் அமைந்த கருங்குளம் பகுதி, நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விரைவு பேருந்து இங்கு நிற்காது. நெல்லை சந்திப்பில் இருந்து 15 என்ற எண் கொண்ட டவுண் பஸ்கள் கோவில் அடிவாரம் வரை செல்லும்.
விரைவு பேருந்துகளில் செய்துங்கநல்லூர் வந்து அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். கருங்குளம் மெயின்ரோட்டில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு.