வழிபாடு

மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-18)

Published On 2025-01-02 02:35 GMT   |   Update On 2025-01-02 02:35 GMT
  • வாசனை வீசும் கூந்தலை உடையவளே!
  • நம்பெருமானது திருவடிகளின் பெருமையைப் பாடி, பூங்குளத்தில் நீராடி மகிழ்வோம்.

திருப்பாவை

பாடல்:

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:

மதநீர் சொரிகின்ற யானையைப் போன்ற பலமுடையவனும், பகைவர்களுக்கு தன் முதுகைக் காட்டாத தோள்வலிமை உடையவனுமாகிய நந்தகோபனுடைய மருமகளே! நப்பின்னைப் பிராட்டியே! வாசனை வீசும் கூந்தலை உடையவளே! வாசல் கதவைத் திறப்பாய்! பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக கோழிகள் கூவுகின்றன. குருக்கத்தி மலர்ப் பந்தலின் மீதுள்ள குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனுடன் பந்தாடி, அந்த பந்தைக் கையில் பிடித்தபடி உறங்குபவளே! உன் கணவனாகிய கண்ணனுடைய திருநாமங்களை நாங்கள் பாடுகின்றோம். உனது சிவந்த தாமரை போன்ற திருக்கைகளில் உள்ள வளையல்கள் ஒலி எழுப்பும்படி வந்து கதவைத் திறவாய்!

திருவெம்பாவை

பாடல்:

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார் போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணே! இப் பூம்புனல்பாய்ந்து, ஆடேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

பெண்ணே! அந்த திருவண்ணாமலையில் வாழும் எம் பெருமானின் தாமரைத் திருவடிகளில் விழுந்து வணங்கும் தேவர்களின் தலைகளில் சூடியுள்ள மாணிக்கக் கற்கள் ஒளி மங்கிப் போகும். வானில் கதிரவன் தோன்றும் போது, சந்திரனின் ஒளி மங்கி, விண்மீன்களும் மறைந்து போகும். பெண்ணாகவும், ஆணாகவும். இரண்டும் அற்ற மூன்றாம் பாலினத்தவராகவும், அனைத்து உயிரினங்களாகவும், விண்ணாகவும், மண்ணாகவும், இன்னபிறவாக விளங்குபவனும், கண்களால் பருக வேண்டிய அமுதமாக நிலைபெற்றவனுமாகிய நம்பெருமானது திருவடிகளின் பெருமையைப் பாடி, இந்த பூங்குளத்தில் நீராடி மகிழ்வோம்.

Tags:    

Similar News