வழிபாடு

மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-17)

Published On 2025-01-01 03:27 GMT   |   Update On 2025-01-01 03:27 GMT
  • பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே!
  • உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்!

திருப்பாவை

பாடல்:

அம்பரமே, தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!

குலவிளக்கே!

எம் பெரு மாட்டி! யசோதாய்! அறிவுராய்;

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:

ஆடையையும், உணவையும், நீரையும் வரையறையே இல்லாது தானம் அளிக்கும் எங்கள் தலைவர் நந்தகோபரே! எழுந்தருள்வீர்! பூங்கொடி போன்ற ஆயர்குலத்தின் கொழுந்து போன்ற ஒளி விளக்கே! எங்கள் தலைவியாகிய யசோதை அம்மா! வானளாவ உயர்ந்து நின்று உலகங்களை அளந்த தேவர்களின் தலைவனே! உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வாய்! சிவந்த பொன்னாலான கால்களை அணிந்த பலதேவனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் இனியும் உறங்காது, உறக்கத்தை விடுத்து எழுந்தருள்வீர்!

திருவெம்பாவை

பாடல்:

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

பெண்களே! அந்த சிவந்த கண்களை உடைய திருமாலுக்கும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனுக்கும், ஏனைய தேவர் பெருமக்களுக்கும் கிடைக்காத ஒரு பேரின்பத்தை நமக்கு அள்ளிக் கொடுப்பவள், நறுமணம் மிக்க கூந்தலையுடைய நம் அன்னை உமையவள். அவள் நம்மை சீராட்டி, நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் வகையில் தன் சிவந்த தாமரை போன்ற திருவடிகளை நமக்குக் காட்டி, அனைவருக்கும் அரசனாக விளங்குபவனும், அடியவர்களுக்கு கிடைத்தற்கரிய அமுதத்தைப் போன்று விளங்குபவனுமாகிய நம் சிவபெருமானைப் போற்றிப் பாடி, தாமரை மலர்ந்துள்ள இந்த பொய்கையில் நீராடுவோமாக!

Tags:    

Similar News