வழிபாடு

திருமண வரம் தரும் `கல்யாண வெங்கடேசப் பெருமாள்'

Published On 2025-01-03 03:22 GMT   |   Update On 2025-01-03 03:22 GMT
  • வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
  • விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார்.

ஆலய முகப்புத் தோற்றம்

அனந்தன் என்னும் பெருமாளுக்கு இந்தப் பூவுலகம் முழு வதும் சிறப்பு வாய்ந்த பல ஆலயங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் மிகப் பழமை வாய்ந்த வைணவக் கோவில்கள் இருப்பது மிக மிக அரிது.


ஆனால் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் அப்படி ஒரு பெருமைமிகு பெருமாள் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகும்.

இவ்வாலயம் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதை மட்டும், அதன் கட்டிடக்கலையை வைத்து கணிக்க முடிகிறது. ஆனால் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்று எதுவும் இல்லை.

பல நூறு வருடங்களாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில், ராமானுஜர் சில காலம் தங்கியிருந்ததாகவும், அவர் சிதிலமடைந்த ஆலயத்தை புதுப்பித்ததாகவும் தற்போதைய தல வரலாறு தெரிவிக்கிறது.

தில்லையை தரிசிக்க வந்த ராமானுஜர், இந்த வழியாகத்தான் தில்லைக்குச் சென்றிருக்கிறார். அப்போது இந்த கிராமத்தில் சிதிலமடைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தைப் பார்த்துள்ளார்.

அப்பகுதி மக்களிடம், "ஏன் இப்படி இந்த ஆலயத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள்? பரந்தாமன் ஆலயத்தை பார்ப்பதற்கே, மனது பாரமாக இருக்கிறதே!" என்று வருத்தப்பட்டாராம்.

ஊர் மக்களோ, "பல நூற்றாண்டு காலமாகவே இந்த ஆலயம் சிதிலமடைந்துதான் இருக்கிறது. இந்த ஆலயத்தை கட்டும் அளவுக்கு, எங்களிடம் போதிய பொருளாதாரம் இல்லை" என்று கூறினராம்.

உடனே ராமானுஜர் தன் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு, இவ்வூரில் சில காலம் தங்கி ஊர் மக்களின் உடல் உழைப்போடு சிதைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தை பழமை மாறாமல் அப்படியே கட்டி முடித்திருக்கிறார் என்ற செவி வழிச் செய்தி நமக்குக் கிடைக்கிறது. அதன்பிறகு அவ்வூர் மக்கள், இந்த பெருமாளைக் கொண்டாடத் தொடங்கினர்.


கோவில் அமைப்பு

முன்மண்டபம் அதில் திருநாமம், அனுமன், கருடாழ்வார் ஆகியோரின் சுதை சிற்பங்கள் அழகுற காட்சி தருகின்றன. அவைகளை வணங்கிவிட்டு உள்ளே சென்றால், பலிபீடம், கருடாழ்வார் ஆகியோரை தரிசிக்கலாம்.

ஆலயத்தில் நுழைந்ததும் முதலில் இருப்பது மணி மண்டபம். அடுத்தது மகா மண்டபம். அர்த்த மண்டபத்தின் வாசலில் ஜெயன், விஜயன் ஆகிய இரண்டு துவார பாலகர்கள் கம்பீரமாக காட்சி தருகிறார்கள். அந்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது.

கிழக்கு நோக்கிய கருவறையில் கல்யாண வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களுக்கு முன்பாக ஸ்ரீதேவி-பூதேவியுடன் கூடிய வரதராஜப் பெருமாள், இடது பக்கம் சக்கரத்தாழ்வார், வலது பக்கம் பெருந்தேவி தாயார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

தன் திருநாமத்திலேயே கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று இருப்பதால், இவ்வாலயம் திருமணத் தடையை போக்கும் சிறப்பு மிக்க ஆலயமாகத் திகழ்கிறது.

பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்த திரு மணங்கள் கைகூட, இவ்வாலய பெருமாள் மீது நம்பிக்கை வைத்து, அவரது சன்னிதி முன்பாக நின்று 'கோவிந்தா..' என்று கோஷம் எழுப்பி பிரார்த்தனை செய்தாலே போது மானது.

தடைகளை அகற்றி விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன சலசலப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் அதுவே கோபமாக மாறி கணவன் - மனைவியை பல நேரங்களில் பிரிப்பதுண்டு.

மனம் வருத்தத்தால் மண வாழ்க்கையில் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழவும் இவ்வாலய கல்யாண வெங்கடேசப் பெருமாளை துளசி மாலை சூட்டி வணங்குகிறார்கள்.


அப்படி ஒன்றுசேரும் தம்பதியர் இருவரும் இங்கு வந்து, துளசியால் இறைவனை அர்ச்சித்து, தங்களின் நன்றிக் கடனை செலுத்துகிறார்கள்.

இவ்வாலயம் அமைந்த பு.உடையூர் கிராமத்தின் முக்கியமான தொழிலாக கருதப்படுவது விவசாயம் தான்.

இங்குள்ள விவசாயிகள், தங்கள் விவசாயப் பணியை தொடங்கும் முன்பு, நாராயணனின் நாமத்தை கூறி பிரார்த்தனை செய்துவிட்டுதான், விவசாயப் பணிகளைத் தொடங்குகிறார்கள். அப்படி செய்யப்படும் விவசாயம், அமோக விளைச்சலை அள்ளித் தருவதாக சொல்கிறார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க இங்கிருக்கும் அனுமனுக்கு கல்வி பயிலும் மாணவ - மாணவிகள், 'ஸ்ரீராமஜெயம்' எழுதி மாலையாக தொடுத்து அணிவித்து பிரார்த்தனை செய்கின்றனர். அப்படி செய்பவர்களுக்கு மன உறுதியும், தன்னம்பிக்கையும் பிறப்பதோடு, கல்வியிலும் சிறந்து விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஆண்டு விழா மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று காலையும், மாலையும் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.

அதோடு வாரம் தோறும் சனிக்கிழமைகள், மாதந்தோறும் ஏகாதசி ஆகிய நாட்களிலும், கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடை பெறும்.

இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். சனிக்கிழமை மட்டும் மாலை வேளையிலும் திறக்கப்படும்.

அமைவிடம்

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் சிதம்பரத்தில் இருந்து பு.உடையூர் கிராமத்திற்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

Tags:    

Similar News