வழிபாடு

நிலக்கோட்டை மாரியம்மன் வீதி உலா வந்த காட்சி. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்.

பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா: நிலக்கோட்டையில் விடிய, விடிய நடந்தது

Published On 2023-04-07 11:18 IST   |   Update On 2023-04-07 11:18:00 IST
  • அம்மனுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா, கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன்படி ராஜராஜேஸ்வரி, பத்ரகாளி, மீனாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, தவழும் கிருஷ்ணன், சிம்மம், ரிஷபம் அலங்காரங்களில் நகர்வலம் வந்த மாரியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த 3-ந்தேதி கொலுமண்டபத்தில் இருந்தபடி அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்தி வருதல், மாவிளக்கு எடுத்தல், சேத்தாண்டி வேடமிடல் உள்ளிட்ட பக்தர்கள் செலுத்திய நேர்த்திக்கடன்களை அம்மன் ஏற்றுக்கொண்டார். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று முன்தினம் அம்மன் கொழு மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் தொடங்கியது. நள்ளிரவு 1 மணி அளவில் கோவிலில் இருந்து அம்மன் நகர்வலம் புறப்பட்டார்.

நிலக்கோட்டை மெயின் பஜார், நால்ரோடு, நடராஜபுரம், சங்கரன் சிலை, சவுராஷ்டிரா நடுநிலைப்பள்ளி, பெரியகாளியம்மன் கோவில் வழியாக காலை 5.45 மணிக்கு அம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தார்.

விடிய, விடிய நடந்த நகர்வலம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதன்பிறகு பொன்னூஞ்சலில் அம்மன் அமர்ந்து, ஆனந்தமாக ஆடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மன் ஊர்வலமாக சென்று பூஞ்சோலையை அடைந்ததுடன் விழா நிறைவு பெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், உறவின்முறை காரியத்தரிசிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலை பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News