வழிபாடு

சாலையோரத்தில் தங்கி உள்ள பாதயாத்திரை பக்தர்கள்.

பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை பக்தர்கள் வருகை

Published On 2022-12-22 06:31 GMT   |   Update On 2022-12-22 06:31 GMT
  • தைப்பூச திருவிழா ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வௌிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதில் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வரும் பக்தர்களே அதிகம். அதன்படி பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வழக்கமாக திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர். அதன்படி தற்போது பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கி உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, பழைய தாராபுரம் சாலை வழியாக காவடி எடுத்து பக்தர்கள் வருகின்றனர். இதில் குழுவாக பாதயாத்திரை வருபவர்கள் வேன், லாரி போன்றவற்றில் சமையலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி வருகின்றனர். வரும் வழியில் சாலையோரம் தங்கி சமைத்து சாப்பிடுவதுடன், மரத்தடியில் ஓய்வு எடுக்கின்றனர்.

அந்த வகையில் ஈரோடு, திருப்பூர் பகுதியில் இருந்து தாராபுரம், அலங்கியம், மானூர் வழியாக பழனி வரக்கூடிய பக்தர்கள் சாலையோரம் உள்ள மரத்தடியில் தங்கி உள்ளனர். பாதயாத்திரை குறித்து பக்தர்களிடம் கேட்டபோது, இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கு முன்பு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. எனவே முன்னதாக வந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு வந்தோம். தாராபுரம்- பழனி இடையிலான பாதயாத்திரை பாதை புதர் மண்டியும், சேதமடைந்தும் உள்ளது. அதை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News