வழிபாடு

திருக்காஞ்சியில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியது: சங்கராபரணி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2023-04-23 10:17 IST   |   Update On 2023-04-23 10:17:00 IST
  • குரு பெயர்ச்சியையொட்டி வருகிற 3-ந்தேதி வரை ஆதி புஷ்கரணி விழா நடக்கிறது.
  • நட்சத்திரப்படி பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியடைந்ததையாட்டி, மேஷ ராசிக்குரிய புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் முதன்முறையாக ஆதிபுஷ்கரணி விழா நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சனிக்கிழமைகளில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

புஷ்கரணி விழாவுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

கங்கைக்கு நிகராக கருதப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி காமாட்சி- ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீகங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.

இதில் கலந்து கொண்டு வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் யாகத்தை தொடங்கி வைத்தனர்.

நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் கோபூஜை நடந்தது. 7 மணிக்கு ஆதி புஷ்கரணி கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து காலசப்த நதி கலச சிறப்பு பூஜை நடந்தது.

அதன்பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் எடுத்துவரப்பட்டு சங்கரபரணி ஆற்றில் கலக்கப்பட்டது. தொடர்ந்து புஷ்கரணி ஸ்நானத்தை செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச சத்தியஞான தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து கங்கை வராக நதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 1 மணிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

புஷ்கரணி நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார் ஆகியோர் சங்கராபரணி ஆற்றில் இறங்கி புனித ஸ்நானம் செய்தனர். தொடர்ந்து முக்கிய விருந்தினர்கள் சிறப்பு சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. ஆதிபுஷ்கரணி விழாவையொட்டி காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், 750 தன்னார்வல பணியாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சியையொட்டி வருகிற 3-ந்தேதி வரை ஆதி புஷ்கரணி விழா நடக்கிறது. நட்சத்திரப்படி பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News