கூடலூரில் தூய மரியன்னை ஆலய தேர் பவனி: திரளானோர் பங்கேற்பு
- தூய மரியன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
- நற்கருணை ஆராதனை, கொடி இறக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூரில் தூய மரியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி பவனி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ஆலய வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. மேலும் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8 நாட்கள் திருவிழா நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வந்தது. 8-வது நாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்பின் விருந்து நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு தூய மரியன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நடு கூடலூர், ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. இதேபோல் தேருக்கு முன்பாக ஏராளமான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியவாறு பவனியாக சென்றனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் மரியன்னை சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் முக்கிய சாலைகள் வழியாக தேர்பவனி வந்து இரவு 11 மணிக்கு ஆலயத்தை அடைந்தது.
இதைத்தொடர்ந்து நற்கருணை ஆராதனை, கொடி இறக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கு தந்தைகள் வின்சென்ட், சார்லஸ் பாபு, ஹென்றி ராபர்ட் உள்பட மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை செய்திருந்தது.