சூளை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று கல்யாண உற்சவம்
- இன்று காலை 11 மணிக்கு உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி திருமஞ்சனம் நடைபெறும்.
- பக்தர்களுக்கு தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்படும்.
சென்னை, சூளை, ஆலத்தூர் சுப்பிரமணி தெருவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகோவிலில் இன்று (சனிக்கிழமை) 12-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவமும், திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது.
இன்று காலை 11 மணிக்கு உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6 மணிக்கு சீர்வரிசை பொருட்கள் மேள, தாளங்கள் முழங்க கொண்டுவரப்படும். அதன் பிறகு ஸ்ரீசுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
விருப்பமுள்ள பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்திற்கு தங்களால் முடிந்த சீர்வரிசை பொருட்களை கொண்டு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்படும். இன்று இரவு 8 மணிக்கு ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருவீதி புறப்பாடு நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலின் ஸ்ரீபாதம் தாங்கி நண்பர்கள் நலச் சங்கம் செய்துள்ளது.