தேரோட்டத்துக்காக தயாராகும் திருப்பரங்குன்றம் கோவில் தேரை படத்தில் காணலாம்.
பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டத்துக்கு தயாராகும் திருப்பரங்குன்றம் கோவில் தேர்
- மகாதேரோட்டம் 9-ந்தேதி நடக்கிறது.
- தேர் தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 டன் எடை கொண்ட இந்த தேரின் மேல்தளத்தில் கோவிலின் கருவறையில் 5 சன்னதிகள் இருப்பது போலவே திருமண கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானை, கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாள். சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய அழகிய மரசுதைகள் (சிற்பங்கள்) உள்ளன.
திருவிளையாடல் புராண சிற்பங்கள், குதிரை, யாழி, யானை, மகரம் என்று 976 முதல் 1,036 சிற்பங்கள் உள்ளன.
பங்குனி திருவிழாவையொட்டி தேரின் அடிபாகத்தில் இருபுறமும் இரும்பிலான உள் சக்கரம் பொருத்தப்பட்டு தேர் தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.
ஆகவே இந்த ஆண்டில் முதல் முறையாக உள் சக்கரத்துடன் தேர்வலம் வரபோகிறது. இரும்பிலான பெரிய சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக், இரும்பிலான பாதுகாப்பு சுதன உள்சக்கரங்கள் என்று காலத்திற்கு ஏற்ப படிப்படியாக தேர் அதிநவீனமாக உருவானாலும் தேரும், தேரின் சிற்பங்களும் பழமை மாறாதபடியே உள்ளது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழாவின் மகாதேரோட்டம் வருகின்ற 9-ந்தேதி நடக்கிறது. இதனையொட்டி வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய பஞ்சபூதங்களை மையப்படுத்தும் முகமாக 5 நிலையாக 46 அடி உயரத்தில் 21 அடி அகலமும், 21 அடி நீளமும் கொண்டு வண்ணமயமான அலங்கார துணிகளால் தேர் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்துவருகிறது.