வழிபாடு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி

Published On 2022-10-10 02:26 GMT   |   Update On 2022-10-10 02:26 GMT
  • நிறைமணி காட்சி நாளை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
  • மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் காய்கறி, பழங்களால் தோரணம் அமைத்து நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் புரட்டாசி மாத பவுர்ணமியான நேற்று நிறைமணி காட்சி நடைபெற்றது. இதற்காக கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்பட பல்வேறு பொருட்களை பிளாஸ்டிக் பையில் கட்டி பந்தல் முழுவதும் தோரணமாக தொங்க விடப்பட்டிருந்தது.

இந்த தோரணம் பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகில் மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்றும், இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறைமணி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

சுமார் 5 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த நிறைமணி காட்சி நாளை(செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை திரளான பொதுமக்கள் பார்வையிட்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

கடைசி நாளில் கோவிலில் தொங்கவிடப்பட்டுள்ள காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்படும். பின்னர் அது பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து 108 வலம்புரி சங்கு அபிஷேகமும், சாக்சோபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிறைமணி தரிசன காட்சியை கோவில் துணை கமிஷனர் ஜெயப்பிரியா தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் டெக்கான் மூர்த்தி, முன்னாள் அறங்காவலர் ரமேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். நிறைமணி காட்சியில் வித்தியாசமாக தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை பக்தர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்துச்சென்றனர்.

Tags:    

Similar News