வழிபாடு

நந்தவனத்தில் உள்ள மகிழ மரத்துக்கு அர்ச்சகர் சிறப்பு பூஜைகள் செய்தபோது எடுத்தபடம்.

திருப்பதி அனந்தாழ்வார் தோட்டத்தில் மகிழ மரத்துக்கு சிறப்பு பூஜை

Published On 2022-10-08 05:33 GMT   |   Update On 2022-10-08 05:33 GMT
  • உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
  • நிகழ்ச்சியில் அனந்தாழ்வாரின் வம்சதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அந்தக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் என்பவர் இருந்தார். அவர் தினமும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து, பூச்சூடுவதற்காக ஏரி வெட்டியும், நந்த வனம் ஒன்றையும் அமைத்திருந்தார். அந்த நந்த வனத்தில் ஏராளமான மலர்செடிகள் வளர்ந்திருந்தன. அந்த நந்தவனத்தில் அடிக்கடி பூக்கள் சிதறுவதை அனந்தாழ்வார் பார்த்தார். இரவில் யாரோ பூக்களை பறிக்கிறார்கள் என்று அவர் சந்தேகப்பட்டார். அவர், ஒருநாள் கண் விழித்திருந்து கண்காணித்தார்.

அப்போது ஏழுமலையானும், பத்மாவதி தாயாரும் நந்த வனத்தில் பூக்களை பறித்து விளையாடினார்கள். இருவரும் பெருமாளும், பிராட்டியும் என்பதை அறியாத அவர், இருவரையும் கட்டிப்போடுவதற்காக விரட்டினார். அதில், பெருமாள் தப்பியோடி விட்டார். பத்மாவதி தாயார் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை, நந்த வனத்தில் உள்ள செண்பகமரத்தில் அனந்தாழ்வார் கட்டிப்போட்டார்.

மறுநாள் ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்ய சென்ற அர்ச்சகர்கள் அவருடைய திருமார்பில் பத்மாவதி தாயார் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர். அப்போது ஏழுமலையான், அசரீரியாக நடந்த சம்பவங்களை சொல்லி அனந்தாழ்வாரையும், மரத்தில் கட்டிப்போட்டுள்ள பெண்ணையும் கோவிலுக்கு அழைத்து வரும்படி கூறினார்.

அதன்படி அனந்தாழ்வாரையும், அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றனர். கோவில் சன்னதிக்குள் சென்றதும் அந்தப் பெண், இவர் (அனந்தாழ்வார்) எனது தந்தை என்று சொல்லியபடியே ஏழுமலையானின் சிலையோடு ஐக்கியமாகி மறைந்து விட்டார். நந்த வனத்தில் பூக்களை பறித்து விளையாடியவர்கள் பெருமாளும், பிராட்டியும் என்பதை அனந்தாழ்வார் உணர்ந்தார். அனந்தாழ்வார் இயற்கை எய்தி ஏழுமலையானின் திருவடியில் இணைந்தார். எனினும், அவர் தற்போதும் திருமலையில் நந்தவனத்தில் மகிழ மரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்த மறுநாளே அனந்தாழ்வாரின் அவதார நிகழ்ச்சி, பாக் சவாரி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை திருமலையில் ஏழுமலையான் கோவில் அருகே அனந்தாழ்வார் தோட்டத்தில் பாக் சவாரி நிகழ்ச்சி நடந்தது.

உற்சவர் மலையப்பசாமி தனியாக தங்கத்திருச்சி வாகனத்திலும், உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றொரு தங்கத் திருச்சி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து அனந்தாழ்வார் தோட்டம் எனப்படும் நந்த வனத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். நந்த வனத்தில் உள்ள 'மகிழ' மரத்துக்கு அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்தனர். மேலும் சில சமய சம்பிரதாயங்கள் நடந்ததும், நந்தவனத்தில் இருந்து உற்சவர்கள் மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பேஷ்கார் ஸ்ரீஹரி, அனந்தாழ்வாரின் வம்சதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News