வழிபாடு

ஸ்ரீரங்கத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி பந்தகால் நிகழ்ச்சி: ஜனவரி 10-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2024-11-14 04:52 GMT   |   Update On 2024-11-14 04:52 GMT
  • டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
  • ஜனவரி 10-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருச்சி:

பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

ஜனவரி 9-ந்தேதி மோகினி அலங்காரமும், 10-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 16-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது.

அதுசமயம் முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News