வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்ததையும், தரிசனத்துக்காக பக்தர்கள் நின்றதையும் படத்தில் காணலாம்.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுக்கும் வைபவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-03-05 10:22 IST   |   Update On 2023-03-05 10:22:00 IST
  • மூலவருக்கு சிறப்பு பூச்சட்டை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
  • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நவத்திருப்பதி கோவில்களில் 8-வது திருத்தலமாக விளங்குவது திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலாகும். நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான இக்கோவிலில் மூலவர் சயனக் கோலத்தில் நிட்சேபவித்தன் வைத்தமாநிதி பெருமாளாகவும், தாயார் குமுதவல்லி, கோளூர் வள்ளியுடன் அருள் பாலித்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாள், குபேரனுக்கு நிதி கொடுத்த தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

பக்தர்கள் தங்களின் பணத்தை பெருமாளின் தலைப்பகுதியில் மரக்காலில் வைத்து வணங்கி பெற்று செல்கின்றனர். அதனை அவர்களின் வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இதற்காக நேற்று மூலவருக்கு சிறப்பு பூச்சட்டை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் வைத்தமாநிதி பெருமாள் மற்றும் தாயார் குமுதவல்லி, கோளூர் வள்ளி தேவியருடன் பூப்பந்தல் கீழ் சிறப்பு அலங்காரத்தில் மகா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Similar News