எலும்புக்கு வலுசேர்க்கும் பிரண்டை
- வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.
- பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன.
பிரண்டை எனும் தாவரம், வேலி ஓரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையாகும். இது, தண்ணீர் இன்றி வெப்பத்தை தாங்கி வளரும். மழைக்காலங்களில் துளிர் விட ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பிரண்டையை பறித்து உணவாக உண்பது வழக்கம்.
பழங்காலத்தில் இருந்து பிரண்டை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனித எலும்பு மண்டலத்தை இரும்பு போல் வலுவாக வைக்கும் திறன் பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.
பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்துகள், பிளவனாய்டு, டேனின், கரோட்டீன் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக எலும்பு தொடர்பான பாதிப்புகளை சரிசெய்வதில் பிரண்டைக்கு இணை எதுவும் இல்லை என்கிறார்கள் இயற்கை மருத்துவ நிபுணர்கள்.
எலும்பு முறிவு, எலும்பு மூட்டு நகர்வு, எலும்பு தேய்மானம், எலும்பு புரை ஆகியவற்றை சரிசெய்யவும் எலும்புகளை வலிமையாக்கவும் பிரண்டையை மருந்தாக பயன்படுத்தலாம், என்கிறார்கள்.
இதே போல, வயிற்றில் பாக்டீரியா மற்றும் பிற கிருமித் தொற்றுகளின் பாதிப்பினால் ஏற்படும் குடல் புண், வாய்ப்புண், அமிலத்தன்மை குடலில் அதிகரிப்பதால் ஏற்படும் குடல் பாதிப்புகள் ஆகியவற்றையும் குணப்படுத்தும் தன்மை பிரண்டைக்கு உண்டு. தற்போது இந்த பிரண்டை அனைத்து இடங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடக்கிறது.
பிரண்டையின் மருத்துவ பயன்கள்:
பிரண்டை எலும்பு வளர்ச்சி, பசியின்மை, சுளுக்கு, செரிமானம், வயிறு உப்பிசம், முதுகு வலி, கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் பருமன், பசியின்மை, மலச்சிக்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது.
துவையல் செய்து சாப்பிடுவதால், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாயுப் பிடிப்பு, தீராத வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.
மேலும் உடல் சுறுசுறுப்பை அதிகரித்து ஞாபக சக்தியை பெருகச் செய்கிறது. மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு அதிக சக்தி தருகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துகிறது.
வாயு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அச்சூழலில் பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, அஜீரணக் கோளாறைப் போக்குகிறது.
மேலும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டை துவையல் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தரும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையின் இளந்தண்டை அரைத்து பற்றுப் போட்டால் எலும்பு முறிவு, அடிப்பட்ட வீக்கம், வலி நிவாரணம் கிடைக்கும். பிரண்டையை பறித்து காயவைத்து அம்மியில் வைத்து அரைத்து, தூள் செய்து நீர்விட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள பகுதியில் தினமும் பூசி வர, எலும்பு முறிவு சரியாகி எலும்புகள் கூடி வலுப்பெறும்.
பிரண்டையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றை ஒரு தேக்கரண்டியுடன், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து தினமும் காலை வேளையில் ஏழு நாட்கள் சாப்பிட்டு வர பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனை சரியாகி ஒழுங்காக மாதவிடாய் ஏற்படக்கூடும்.
பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள, பூச்சிகள் அழியும். . பசியைத் உண்டு பண்ணும். வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்குவதற்கு மருந்தாக சிறந்து விளங்குகிறது. பிரண்டை, சுளுக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, மோரில் சிறிது உப்புத்தூள் சேர்த்து ஊறவைத்து, காயவைத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை, நாக்கில் சுவையின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பிரண்டைத் துவையல் வயிற்றுப்புண், வாய்ப்புண், ஊளைச்சதை இவற்றைத் குணமாக்குகிறது. பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும்.