பொது மருத்துவம்

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா?

Published On 2025-01-19 13:59 IST   |   Update On 2025-01-19 13:59:00 IST
  • வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.
  • சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.

ஹியூமன் மெட்டா நியூமோ (HMPV) வைரஸ் புதியது அல்ல. இது முதன்முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. இது சுவாச அமைப்பை முதன்மையாக பாதிக்கும் நியூமோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும்.

காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தொண்டை வலி போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.


இது பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை தான்.

மேலும் இது சர்க்கரை நோயாளிகள், புற்று நோய் பாதிப்புள்ளவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து உட்கொள்ளும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கைக்குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோருக்கு நிமோனியா, மூச்சுக்குழலழற்சி, சுவாச செயலிழப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்நோய் இருமல் அல்லது தும்மலில் வெளிப்படும் வைரஸ் கலந்த சுவாச துளிகள் மூலமாகவும், தொடுவது அல்லது கைகுலுக்குவது போன்ற நெருங்கிய தொடர்புகளாலும், வைரஸ் படிந்த மேற்பரப்புகளை தொட்டு விட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதாலும் பரவுகிறது.


இத்தொற்று 1 அல்லது 2 வாரங்களில் தானாகவே சரியாக கூடிய ஒரு தன்னியக்க நோயாகும். இது குளிர் காலங்களில் மட்டுமே காணப்படுகிறது. HMPV வைரஸ் நோய் தொற்றுக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. இந்நோய் தொற்று வராமல் தடுக்க வழக்கமான சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.

HMPV வைரஸ் தொற்றுக்கும், கோவிட் நோய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்நோயின் இறப்பு விகிதமும் கோவிட் நோயுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. ஆகையால் எச்.எம்.பி வைரஸ் தொற்று குறித்து நீங்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம்.

Tags:    

Similar News