பொது மருத்துவம்

காபி குடிப்பதில் இப்படியொரு நன்மை இருக்கா? வெளியான ஆய்வு முடிவு

Published On 2025-01-09 11:55 IST   |   Update On 2025-01-09 11:55:00 IST
  • அளவோடு பருகினால் காபியும் ஒரு அரு மருந்துதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
  • காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதைவிட சாப்பிட்ட பிறகு சிறிது இடைவெளியில் காபி குடிப்பதே நல்லது என்றும் கூறுகிறார்கள்.

காபி...

அடடா பேஷ்... பேஷ்...

காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு காபியை ருசிப்பவர்கள் ஒரு ரகம். காபி கோப்பையை கையில் பிடித்தபடியே பேப்பர் படிக்கும் பழக்கத்துக்கு பலர் அடிமையாகி இருப்பார்கள்.

இன்னும் சிலரோ, காபி கிளாசுடன் ஹாயாக சேரில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே ருசிப்பவர்களும் உண்டு. மேலும் சிலரோ, வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு காபி குடிக்க விரும்புவார்கள்.

இப்படி காபியை ரசித்து... ருசித்து குடிப்பவர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

காபி குடிப்பதால் நன்மையா? தீமையா? என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் நல்லதும் இருக்கு... கெட்டதும் இருக்கு என்கிறார்கள் டாக்டர்கள்.



100 மில்லி கிராம் அளவிலான காபியை ஒரு நாளைக்கு 2 அல்லது 4 முறை குடிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது எந்த பானத்துக்கு பொருந்துகிறதோ இல்லையோ காபிக்கு நிச்சயம் பொருந்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

காபிக்கு அடிமையானவர்களே அதிக அளவில் காபியை பருகுவதாக கூறும் டாக்டர்கள், ஒருவர் ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் காபி குடிக்கிறார் என்றால் அவர் காபிக்கு அடிமையானவராகவே இருப்பார்.

அப்படி அதிக அளவில் காபியை குடிப்பவர்கள் அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு, இரைப்பை பாதிப்பு உள்ளிட்டவைகளால் அவதிப்பட நேரிடும் என்று அறிவுரை கூறும் டாக்டர்கள், காபியை அளவோடு பருகினால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடுகிறார்கள்.

மன அழுத்தம், மனச்சோர்வு, நடுக்குவாத நோய் உள்ளிட்டவை வராமல் தடுக்கும் தன்மை காபிக்கு உள்ளது. கல்லீரல், புற்றுநோய் மற்றும் இதர புற்று நோய்களை தடுக்கும் திறனும் காபிக்கு உள்ளது.

இதனால் அளவோடு பருகினால் காபியும் ஒரு அரு மருந்துதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதைவிட சாப்பிட்ட பிறகு சிறிது இடைவெளியில் காபி குடிப்பதே நல்லது என்றும் கூறுகிறார்கள்.

இரவில் காபி குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் என்று கூறும் டாக்டர்கள் காபிக்கு அடிமையாகாமல் இருக்கும் வரை பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், உயிரிழப்பு அபாயத்தை குறைக்க காபி எப்போதெல்லாம் குடிக்கலாம் என்று தற்போது நடைபெற்ற ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக நிபுணர்கள் தலைமையிலான ஆராய்ச்சி குழு, முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஆய்வில் உள்ளவர்களைக் கண்காணித்தது. மேலும், இறப்பு அபாயத்தைக் குறைக்க எப்போது காபி குடிக்க வேண்டும் என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது.



பல ஆண்டுகளாக, மிதமான அளவில் காபி குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பல ஆய்வுகள் பட்டியலிட்டுள்ளன. ஆனால் முதல் முறையாக, காபியை எப்போது உட்கொள்வது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற 40,725 பேர்களில், இரண்டு தனித்துவமான காபி குடிக்கும் முறைகள் காணப்பட்டன. காலை காபி குடிக்கும் பழக்கம் கொண்ட பங்கேற்பாளர்கள், பெரும்பாலும் அதிகாலை 4 மணி முதல் 11.59 மணி வரை காபியை பருக எடுத்துக் கொள்கின்றனர்.

இதற்கிடையில், நாள் முழுவதும் காபி குடிப்பவர்கள், காலை, மதியம் (மதியம் 12 மணி முதல் மாலை 4:59 மணி வரை) மற்றும் மாலை (மாலை 5 மணி முதல் அதிகாலை 3:59 மணி வரை) என நாள் முழுவதும் காபி குடிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



காலையில் காபி குடிப்பவர்கள் காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது இறப்பதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 31 சதவீதம் குறைவாக இருந்தது. நாள் முழுவதும் காபி குடிப்பவர்களுக்கு காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது எந்த ஆபத்தும் குறையவில்லை.

காபி குடிப்பதால் இருதய நோய் அபாயம் அதிகரிப்பதில்லை என்றும், டைப் 2 நீரிழிவு போன்ற சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News