பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்?
- எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது.
- உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது.
ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறம்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆப்பிள்களில் விதவிதமான வண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சிவப்பு ஆப்பிளுக்கு அடுத்தபடியாக பச்சை ஆப்பிள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இதுவும் சிவப்பு ஆப்பிளை போல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கக்கூடியதுதான். சிவப்பு ஆப்பிளை ருசிக்க விரும்பாத குழந்தைகளுக்கு மாற்றுத்தேர்வாக பச்சை ஆப்பிளை கொடுக்கலாம். இந்த ஆப்பிளை ஏன் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
* சிறு வயதிலேயே குழந்தைகள் பலர் பார்வை குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பச்சை ஆப்பிளில் பார்வைத்திறனை பலப்படுத்த உதவிடும் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. கண்களின் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது. சிவப்பு ஆப்பிளை போலவே இந்த ஆப்பிளின் வெளிப்புற தோல் பகுதியை தவிர்க்கக்கூடாது. நன்கு கழுவிவிட்டு உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மெருகேற்றும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உண்டு.
* எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது. குறிப்பாக இந்த ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கக்கூடியது. இதனுடன் பிற ஊட்டச்சத்து உணவுகளையும் உட்கொள்வது எலும்புகளை வலிமையாக்கும்.
* தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் தொடர்பான நோய் அபாயங்களை குறைக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். நோய்த்தொற்று பரவும் காலத்தில் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
* பச்சை ஆப்பிளில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பு அளவைக் குறைக்க உதவிடும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும். பச்சை ஆப்பிள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்பது அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
* உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் பச்சை ஆப்பிளை உட்கொள்வது நல்லது. ரத்த அழுத்த பிரச்சனை கொண்டவர்களுக்கும் பச்சை ஆப்பிள் சிறந்த நண்பனாக விளங்கும்.
*பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவிடும். செரிமான செயல்பாட்டுக்கும் துணை புரியும். வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்தும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திடவும் உதவிடும்.
பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடும். வாயு தொல்லை ஏற்படவும் வழிவகுத்துவிடும்.