சமையல்

அரிசிப் பொரியும்.. அற்புத நன்மைகளும்..!

Published On 2024-06-18 09:23 IST   |   Update On 2024-06-18 09:23:00 IST
  • பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
  • அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

அரிசியை பொரிப்பதன் மூலம் தயார் செய்யப்படும் அரிசிப் பொரியை உட்கொள்ளலாமா? என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அரிசிப் பொரியும் ஊட்டச்சத்துமிக்க பொருள்தான். அதில் நார்ச்சத்து, புரதம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஏ, சி உள்பட பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை. 

* அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

* இது குறைந்த கலோரி கொண்டது. அதனால் உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்தும், அத்தியாவசியமான ஊட்டச்சத்து கலவைகளும் பசியை கட்டுப்படுத்த உதவும். அதனால் அதிகம் சாப்பிடுவதை தடுத்து, விரைவாக உடல் எடை குறைவதற்கு வித்திடும்.

* மனித உடலின் முக்கிய அங்கமாக விளங்கும் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அரிசிப் பொரி உதவும். அதிலிருக்கும் கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, தியாமின், ரிபோபிளேவின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் எலும்புகளிலுள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மீளுருவாக்கமும் செய்யும். ஒட்டுமொத்த உடல் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் உதவும்.

* அரிசிப் பொரியில் சோடியம் குறைவாகவே இருக்கும். அதனை உட்கொள்வது ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கு உதவும். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் இரண்டையும் நிர்வகிக்க உதவும். இதய செயல்பாட்டையும் மேம்படுத்தும். மாரடைப்பு, ரத்த குழாய்களில் அடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

* அரிசிப் பொரியில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்டுகள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் செய்கின்றன. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுவதற்கும், வயிற்றை பாதிக்கும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்கும் உதவுகின்றன. சளி, தொண்டை புண் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் துணைபுரிகின்றன.

* செரிமானத்தை ஊக்குவிக்கவும் அரிசிப் பொரி சிறந்த சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. வயிறு மற்றும் குடலில் சேரும் உணவுத்துகள்களை உடைத்து ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு தூண்டிவிடும்.

* அரிசிப் பொரியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். தோல் சுருக்கம், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுப்பதோடு விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போடும்.

* அரிசிப் பொரியுடன் மசாலாப் பொருட்களை கலந்து சிற்றுண்டியாக தயார் செய்து சாப்பிடலாம். அரிசிப் பொரி ஏராளமான நன்மைகளை வழங்கினாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். 150 கிராமுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அதை விட அதிகமாக உட்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வித்திடும். இரவுப்பொழுதில் உட்கொள்வது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

Tags:    

Similar News