சமையல்

கொங்குநாடு ஸ்பெஷல் டேஸ்ட்டியான சிக்கன் சிந்தாமணி

Published On 2023-01-21 08:16 GMT   |   Update On 2023-01-21 08:16 GMT
  • இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
  • சிக்கன் சிந்தாமணி செய்முறையை பார்க்கலாம்..

கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.

இதில் மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் காரம் மட்டும் தூக்கலாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் மிளகாயின் சுவை. சிக்கன் என்றாலே சூடு என்பார்கள். ஆனால், சிக்கன் சிந்தாமணி மட்டும் உடலுக்கு சூடே கிடையாது. காரணம் அதை மண் சட்டியில், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி சமைப்பார்கள். ஈரோடுவாசிகள் சிக்கன் சிந்தாமணியை மிளகாய் கறி எனவும் அழைப்பார்கள். எப்போதுமே சிக்கனை வைத்து வறுவல், தொக்கு, பிரட்டல் என ஒரே மாதிரியான ரெசிபிக்களை சமைத்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் சன்டே சமையலில் சிக்கன் சிந்தாமணியை சமைத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - 1 கிலோ

கடலை எண்ணெய் - 50 மிலி

கறிவேப்பிலை - தேவையான அளவு

சின்ன வெங்காயம் - 150 கிராம்

சிவப்பு மிளகாய் - 150 கிராம்

உப்பு - தேவையான அளவு

பூண்டு - 5

தக்காளி - 1

பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 கைபிடி அளவு

சீரகம் - 1 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை

சிக்கன் சிந்தாமணியை மண்சட்டியில் சமைத்தால் மட்டுமே அதன் பாரம்பரிய சுவை கிடைக்கும்.

நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பூண்டை தோல் நீக்கி இடித்துகொள்ளவும்.

சீரகத்தை இடித்து வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும். 

அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும். 

பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு, காரமும் சரியாக இருக்கிறதாக என ஒருமுறை ருசிப்பார்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். 

இப்போது இளசான தேங்காய் துண்டுகள், இடித்த சீரகம் சேர்த்து நன்கு கிளறவும். 

மீண்டும் 15 நிமிடத்திற்கு சிக்கனை சுண்ட வேக விடவும்.

இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலையை தூவவும். 

அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட பரிமாறலாம்.

சுவையான கொங்குநாடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி தயார்.

Tags:    

Similar News