பெண்கள் உலகம்

திருமணமாகப் போகும் பெண்ணா நீங்கள்?.. உங்களுக்கான சில டிப்ஸ்...

Published On 2025-01-16 12:03 IST   |   Update On 2025-01-16 12:03:00 IST
  • ஆழ்ந்த தூக்கம் கட்டாயம் தேவை.
  • வெந்நீர் அருந்துவதிலும் கவனம் வேண்டும்.

பெண்கள் தங்களின் ஸ்பெஷல் தினமான திருமண நாளில் தேவதை போன்று தோன்ற விரும்புவார்கள்.

மணப்பெண்ணுக்கு என்று விசேஷ அலங்காரம் உண்டு என்றாலும், எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து ஒப்பனை செய்து கொண்டாலும், அவர்களுக்குள் இருந்து வெளிப்படும் அழகுதான் கல்யாண நாளில் பிரகாசமாய் ஒளிரும்.

அந்த இயற்கையான பொலிவுக்கு, திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே மணப்பெண் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தமது உணவுப் பழக்கங்களிலும் சில மாற்றங்களை செய்துகொள்வது, அவர்களது உடலும் முகமும் பொலிவு பெற உதவும்.

திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து நாள் தோறும் குங்குமப்பூ, மஞ்சள் ஆகியவை கலந்த பாலை குடிப்பதால் முகத்தில் பளபளப்பு ஏற்படும். வெந்நீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும். இளநீர், பழரசம் பருகலாம். இதனால் இயற்கையாகவே முகம் பொலிவு பெறத் தொடங்கும். அதேநேரம், துரித உணவுகள் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

மேலும், ஆழ்ந்த தூக்கம் கட்டாயம் தேவை. அதனால் நாள்தோறும் 8 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது உடலின் ஆரோக்கியத்துக்கு அவசியமானது. ஆனால், எவ்வளவுதான் கவனமாக சாப்பிட்டாலும் மனஅழுத்தம் இருந்தால் அது முகத்தில் தெரியும். இதனால், அழகான முகத்தில் பருக்கள் கூட வரலாம். மனம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், முகம் வாடிய மலரை போல மந்தமாக காணப்படும்.

மாறாக, நன்றாக தூங்கி, சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் மனஅழுத்தம் நீங்கும்.



வெந்நீர் அருந்துவதிலும் கவனம் வேண்டும். மிதமான சூடுள்ள வெந்நீரைத்தான் அருந்த வேண்டும். அதிக சூடான நீரை அருந்துவதால் உங்களுடைய முகத் தசைகள் தளர்ந்து, வயதான தோற்றம் ஏற்படலாம்.

மேற்கண்ட விஷயங்களுடன், மணப்பெண்ணாக போகிறவர், பின்வரும் விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்...

சரியான உணவுப்பழக்கத்தை கொண்டிருப்பது மட்டும் போதாது. சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் அவசியம். எப்போதும் உணவை சூடாக சாப்பிடுவது நல்லது. துரித உணவுகளை மறந்தும் உண்ணக்கூடாது. இப்படி ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் உடலில் நச்சுகள் சேராது, முகமும் பளபளப்பாக காணப்படும்.

நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை வாக்கிங் செல்லலாம். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை 30 நிமிடங்கள் செய்வது உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்க உதவும். மனஅழுத்தத்தை குறைத்து உடலை நல்ல வடிவத்துக்கு கொண்டு வரவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

தேவையற்ற பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பக் கூடாது. திருமணம் தொடர்பான விஷயங்கள், வேலைகளை குடும்பத்தினர் கவனித்துக்கொள்வார்கள் என்று விட்டுவிட்டு, மணப்பெண் தனது அழகு, ஆரோக்கியம், மனநலத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல பழக்கங்களுடன், மனதை அமைதியாக வைத்திருக்கும்போது, மணமகளின் முகமும் நிலவு போல ஜொலிக்கத் தொடங்கும்.

Tags:    

Similar News