பெண்களே சிக்கனத்தை பின்பற்றி சேமிக்க பழகுவோம்...
- சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும்.
- சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். நாம் சேமித்து வைக்கும் சிறிய தொகையும் ஏதாவது ஒரு சமயத்தில் நிச்சயம் கைகொடுக்கும். சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ந் தேதி 'உலக சேமிப்பு தினம்' கொண்டாடப்படுகிறது. சேமிப்பு இல்லாத வாழ்க்கை, கூரை இல்லாத வீட்டுக்கு சமம். அத்தியாவசிய தேவைகளை தாண்டி பணத்தை சேமித்து வைப்பது, எதிர்கால பயன்பாட்டுக்கு பக்கபலமாக இருக்கும்.
ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தை பெற்ற உடன், செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தையாவது கட்டாயம் சேமிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கும் சேமிப்பின் அவசியத்தை சிறு வயதிலேயே சொல்லி கொடுக்க வேண்டும். சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய பணம் வீணாகாமல் இருப்பதோடு நம்முடைய பொருளாதார நிலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது. சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும். இப்பழக்கமானது ஆடம்பர செலவுகளை குறைக்க கற்று தருகின்றது. சிக்கனத்தை கடைப்பிடிக்க வழிவகை செய்கின்றது.
மனிதர்கள் இளம் வயதில் அதிகமாக உழைக்க இயலும், ஆனால் முதுமையில் உழைக்க உடலில் சக்தி இருக்காது. எனவே உழைக்கும் காலத்தில் சிறுதொகையை சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் அது உதவும். எறும்புகள் கூட தனக்கான உணவை கோடையில் சேமித்து வைக்கும், பின்பு மழை நாட்களில் சேமித்த உணவை உண்டு உயிர் வாழுகிறது. ஓர் எறும்புக்கு கூட சேமிப்பின் முக்கியத்துவம் தெரிகிறது.
அதுபோல் மனிதர்களாகிய நாம் சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. அரசு சிறு சேமிப்பு நிலையங்கள், அரசு வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகியவற்றில் பணத்தை சேமிக்கலாம். நாம் சேமிக்கும். பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. சேமிப்பு பழக்கமும், சிக்கனமும் இருந்தால்தான் ஒருவர் வாழ்வில் உயரத்தை அடைய முடியும்.
சிக்கனம் சிறந்த பண்புகளுள் ஒன்று. சேமிப்பு பிற்கால வாழ்வை ஒளி மயமாக்கும். சேமிப்பு வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது. எனவே அனைவரும் சிக்கனத்தை பின்பற்றி சேமிக்க பழகுவோம்.