செய்திகள்

தமிழகம் முழுவதும் 22-ம் தேதி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2017-02-19 13:28 IST   |   Update On 2017-02-19 13:28:00 IST
தமிழகம் முழுவதும் 22-ம் தேதி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அக்கட்சியின் செயல் தலைவரும் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முடிவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் தி.மு.க. தரப்பில் நேர்மையான முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் சபாநாயகர் தரப்பில் மறுக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் நேற்று ரகளை ஏற்பட்டது.

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சட்டசபையில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டதும், அதைதொடர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்தும் எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பு குறித்து தமிழக மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம் என்று மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து இருந்தார். அடுத்தகட்டமாக எந்த மாதிரியான போராட்டத்தில் ஈடுபடுவது? என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 22-ம் தேதி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

Similar News