செய்திகள்

அ.தி.மு.க. சட்ட விதிகளை சரியாக ஆய்வு செய்யவில்லை: தேர்தல் கமி‌ஷன் மீது தி.மு.க. புகார்

Published On 2017-11-24 11:33 IST   |   Update On 2017-11-24 11:33:00 IST
இரட்டை இலை தீர்ப்பை கூறுவதற்கு முன்பு அ.தி.மு.க. சட்ட விதிகளை தேர்தல் கமி‌ஷன் சரியாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை:

இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க. கட்சியும் எடப்பாடி அணிக்கே சொந்தம் என்று மத்திய தேர்தல் கமி‌ஷன் நேற்று தீர்ப்பு வழங்கியது.



இது சம்பந்தமாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் கமி‌ஷன் முறையாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கவில்லை. அ.தி.மு.க. கட்சிக்கு என்று சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கமி‌ஷன் தனது தீர்ப்பை கூறுவதற்கு முன்பு அவற்றை முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமலேயே தீர்ப்பை சொல்லி இருக்கிறார்கள். இது, ஒரு தரப்பினருக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு போல உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சின்னத்தை வழங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அது தவறான நடைமுறை. மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு சொன்னதை ஏற்று தேர்தல் கமி‌ஷன் இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

மேலும் சின்னத்தை ஒதுக்குவது சம்பந்தமாக முடிவு எடுக்கும் முன்பு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து இருக்க வேண்டும்.

1993-ல் ம.தி.மு.க. உருவான போது, எங்களுக்கும், வைகோவுக்கும் இடையே இதே பிரச்சினை வந்தது. ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களில் 800 பேர் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். வைகோவுக்கு 150 பேரின் ஆதரவு மட்டுமே இருந்தது.

குஜராத் தேர்தலை தள்ளி வைத்த வி‌ஷயத்திலும், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வி‌ஷயத்திலும், மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் கமி‌ஷன் செயல்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை கிடைத்து விட்டதால் அரசியல் ரீதியாக தி.மு.க.வுக்கு எந்த சவாலும் ஏற்பட்டு விட்டதாக கருதவில்லை என்று கூறினார்.

Similar News